இரண்டு புதிய மூலகங்களுக்கான பெயர்கள் முன்மொழியப்பட்டன

விக்கிசெய்தி இலிருந்து

சனி, திசம்பர் 3, 2011

ஆவர்த்தன அட்டவணையில் இடம்பெறவிருக்கும் இரண்டு புதிய மூலகங்களுக்கான பெயர்கள் அறிவியலாளர்களால் முன்மொழியப்பட்டுள்ளன.


முன்மொழியப்பட்ட இப்பெயர்கள் ஏற்றுக் கொள்ளப்படும் இடத்து, 114 வது மூலகம் இயற்பியலாளர் கியோர்கி ஃபிளெரொவ் என்பவரின் நினைவாக ஃபிளெரோவியம் (Flerovium, Fl) எனப் பெயரிடப்படும். 116 வது மூலகம் கலிபோர்னியாவில் உள்ள லாரன்ஸ் லிவர்மோர் தேசிய ஆய்வுகூடத்தில் கண்டுபிடிக்கப்பட்டதன் நினைவாக லிவர்மோரியம் (Livermorium, Lv) எனப் பெயரிடப்படும்.


ஆவர்த்தன அட்டவணையை நிர்வகிக்கும் குழு இன்னும் ஐந்து மாதங்களில் இவற்றின் பெயர்களை அதிகாரபூர்வமாக அறிவிக்கும். இம்மூலகங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டவையாகும்.


113வது, 115வது, மற்றும் 118வது மூலகங்கள் இன்னமும் மறு ஆய்வில் உள்ளன.


லிவர்மோர் ஆய்வுகூட அறிவியலாளர்கள், உருசியாவின் டூப்னாவில் உள்ள ஃபிளெரோவ் ஆய்வுகூடத்துடன் இணைந்து இந்த இரண்டு புதிய மூலகங்களையும் கண்டுபிடித்தனர். கியூரியம் மூலகத்துடன் கல்சியம் அயன்களை மோதவிடுவதன் மூலம் 116வது மூலகம் உருவானது, இது விரைவாகத் தேய்வடைந்து 114வது மூலகமானது.


பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் (IUPAC) பொதுமக்களின் கருத்துகளைப் பெற்று புதிய மூலகங்களுக்கான பெயர்களை அறிவிக்கும்.


மூலம்[தொகு]