உள்ளடக்கத்துக்குச் செல்

31 ஆண்டுகளின் பின்னர் எகிப்தில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சூன் 1, 2012

எகிப்தில் கடந்த 31 ஆண்டு காலமாக அமுலில் இருந்து வந்த அவசரகாலச் சட்டம் நேற்று வியாழக்கிழமை முதல் நீக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் மூலம் சந்தேக நபர்களை நீண்ட காலம் தடுத்து வைத்திருக்க, மற்றும் அவர்களை சிறப்பு நீதிமன்றங்களில் விசாரிக்க பாதுகாப்புப் படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.


1981 ஆம் ஆண்டு அன்றைய அரசுத்தலைவர் அன்வர் சதாத் படுகொலை செய்யப்பட்ட நாளில் இருந்து தொடர்ச்சியாக இது நடைமுறையில் இருந்து வந்துள்ளது. கடந்த ஆண்டு முன்னாள் அரசுத்தலைவர் ஒசுனி முபாரக்கின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் இச்சட்டத்தை நீக்கும் படி முக்கிய கோரிக்கையாக விடுத்திருந்தனர்.


அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டது குறித்து கருத்துத் தெரிவித்த அமெரிக்க அரசுத் திணைக்களப் பேச்சாளர் மார்க் டோனர், "மக்களாட்சியை நோக்கிய பயணத்தில் இது ஒரு முக்கிய படிக்கல்," எனக் கூறினார்.


எகிப்தில் ஒரு காலத்தில் 10,000 பேர் வரையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக மனித உரிமை அமைப்புகள் கூறியிருந்தன. தடுத்து வைக்கப்பட்டிருந்தோரில் பலரைக் காணவில்லை எனவும் அவை தெரிவித்திருந்தன.


எகிப்தில் இம்மாதம் 16-17 ஆம் நாட்களில் அரசுத்தலைவருக்கான இரண்டாம் கட்ட வாக்கெடுப்புகள் நடைபெறவிருக்கின்றன. முசுலிம் சகோதரத்துவக் கட்சியின் தலைவர் முகம்மது முர்சி, மற்றும் முன்னாள் வான்படைத் தளபதி அகமது சாஃபிக் ஆகியோர் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.


மூலம்

[தொகு]