உள்ளடக்கத்துக்குச் செல்

கிர்கித்தானில் ஆர்ப்பாட்டங்களை நிறுத்தக் கோரி வயோதிபர் தனக்குத் தானே தீ மூட்டித் தற்கொலை

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், ஏப்பிரல் 16, 2012

கிர்கித்தானில் இடம்பெற்று வரும் எதிர்ப்புப் போராட்டங்களை நிறுத்தக் கோரி வயோதிபர் ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டித் தற்கொலை செய்து கொண்டார்.


நேற்று ஞாயிற்றுக்கிழமை 73 வயதான வயோதிபர் தன் உடல் மீது எரிபொருளை ஊற்றித் தனக்குத் தானே தீ மூட்டினார் என கிர்கித்தானின் உட்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. உடம்பில் 96 வீதத் தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அந்த நபர் இன்று அதிகாலையில் மருத்துவமனையில் உயிரிழந்தார்.


இறந்த நபரின் கோரிக்கை என்னவென்பது உறுதியாகத் தெரியவில்லை எனக் கூறிய காவல்துறையினர், அவர் தன்னுடன் எடுத்துச் என்ற பதாகைகளையும் சேர்த்து எரித்து விட்டதாகத் தெரிவித்தனர். ஆனாலும், இச்சம்பவத்தை நேரில் கண்டவர்கள் அந்த வயோதிபர் நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் ஆர்ப்பட்டங்களால் மனமுடைந்து போயிருந்ததாகவும், இதனால் அவர் நாட்டில் ஒழுங்கைப் பேண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்ததாகவும் தெரிவித்தனர்.


அத்துடன் தனது மனைவி மிகக் கடுமையாகச் சுகவீனமுற்றுள்ளதாகவும், அவருக்கு உடனடியாக மருத்துவ வசதிகள் செய்து தரப்பட வேண்டும் எனக் கோரியதாகவும் தெரிகிறது.


2010 ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பை அடுத்து, மத்திய ஆசிய நாடான கிர்கித்தானில் தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. 2011 ஆம் ஆண்டில் மட்டும் 3,000 இற்கும் அதிகமான போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மார்ச் மாத முற்பகுதியில் அரசாங்கத்தைப் பதவி விலககோரி எதிர்க்கட்சிகள் நாட்டின் தெற்கே மூன்று ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தனர்.


மூலம்

[தொகு]