உள்ளடக்கத்துக்குச் செல்

2011 நவம்பரில் சிறுகோள் ஒன்று பூமிக்கு அருகாக செல்லவிருக்கிறது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், மே 10, 2011

2011 நவம்பர் 8 ஆம் நாளில் 2005 யூ55 என்ற சிறுகோள் பூமியில் இருந்து ஏறத்தாழ 201,700 மைல்கள் தொலைவில் செல்லவிருப்பதாக நாசா அறிவித்துள்ளது. இத்தூரம் சந்திரனின் தூரத்தை விடக் குறைவானதாகும்.


2005 யூ55 சிறுகோள்

யூ55 (2005 YU55) என்ற இந்தச் சிறுகோள் (asteroid) 2005 ஆம் ஆண்டு திசம்பர் 28 இல் அரிசோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராபர்ட் மெக்மிலன் என்பவரால் முதன் முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பருமனும், பூமியிலிருந்தான இதன் தூரமும் இச்சிறுகோளைப் பற்றி மேலும் அறிய வானியலாளர்களுக்கு ஆர்வம் மிகுந்துள்ளது.


“இச்சிறுகோள் 400 மீட்டர்கள் அகலமானது. 2028 ஆம் ஆண்டுக்கு முன்னர் பூமிக்குக் கிட்டவாக வரும் மிகப்பெரிய விண்கல் இதுவாக இருக்கும்,” என நாசாவைச் சேர்ந்த டொன் யோமன்ஸ் தெரிவித்தார். ஆனாலும் இது குறித்து நாம் பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை என்றார் அவர்.


“யூ55 குறைந்தது அடுத்த 100 ஆண்டுகளுக்கு பூமியுடன் மோதுவதற்கான வாய்ப்பு இல்லை,” என்றார் யோமன்சு. “பூமிக்கு மிகக் கிட்டவாக வரும் போது, பூமியின் மீது அதன் ஈர்ப்பு விசை மிகவும் புறக்கணிக்கத்தக்க அளவாகவே இருக்கும்.”


இப்படியான சிறுகோள்கள் ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமிக்குக் கிட்டவாக வந்து போகின்றன என நாசா தெரிவிக்கிறது.


நவம்பர் 8 ஆம் நாள் இச்சிறுகோள் பூமிக்குக் கிட்டவாக வரும்போது அதனை உயர் நுட்ப இரட்டைத் தொலை நோக்காடி ஊடாகப் பார்க்கலாம். 2029 சனவரி 19 இல் இச்சிறுகோள் வெள்ளிக் கோளுக்கு 180,000 கிமீ அருகே செல்லும்.


மூலம்

[தொகு]