இசுப்பானிய பாஸ்க் போராளிகள் போர்நிறுத்தத்தை அறிவித்தனர்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு செப்டம்பர் 5, 2010

இசுப்பானியப் பாஸ்க் போராளிகள் அமைப்பு “எட்டா” தனிநாட்டுக்கான தமது போராட்டத்தில் “ஆயுத வழியை” இனிமேல் கையாளப் போவதில்லை என அறிவித்துள்ளனர்.


பிபிசி செய்தி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஒரு காணொளியிலேயே இவ்வறிவித்தல் தரப்பட்டுள்ளது. ”சனநாயக வழி”க்கு தாம் திரும்புவதற்காக சில மாதங்களுக்கு முன்னரேயே இந்த முடிவைத் தாம் மேற்கொண்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். தமது கோரிக்கைகளுக்கு சனநாயக முறையிலேயே தீர்வு காணலாம் எனத் தாம் தற்போது நம்புவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.


இவர்களின் இவ்வறிவித்தலுக்கு இசுப்பானிய அரசு இதுவரை எந்த மறுமொழியும் தரவில்லை. எட்டா போராளிகள் ஆயுதங்களைக் கைவிட்டால் மாத்திரமே அவர்களுடன் பேச்சுக்குச் செல்வோம் என அவர்கள் முன்னர் அறிவித்திருந்தனர். எட்டா போராளிகள் முன்னர் இரண்டு முறை போர்நிறுத்தத்தை அறிவித்துப் பின்னர் பின்வாங்கினர்.


கடந்த 40 ஆண்டுகளாக எட்டா போராளிகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆயுதப் போரில் 820 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். 1959 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட எட்டா அமைப்பு வடக்கு இசுப்பானியாவின் ஏழு பிரிவுகளிலும், பிரான்சின் தென்மேற்குப் பகுதியிலும் தனிநாடு கோரிப் போராடுகிறது.

மூலம்[தொகு]