உள்ளடக்கத்துக்குச் செல்

1930-70 காலப்பகுதியில் சிறுவர்களைத் தவறாக நடத்தியமைக்காக ஆஸ்திரேலியா மன்னிப்புக் கோரியது

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், நவம்பர் 17, 2009


1930-70 வரையிலான காலப்பகுதியில் கிட்டத்தட்ட 500,000 சிறுவர்கள் அநாதை இல்லங்களிலும் சிறுவர் இல்லங்களிலும் தடுத்து வைக்கப்பட்டமை தவறான நடத்தையென்பதை ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரட் ஒப்புக்கொண்டு, "மறக்கப்பட்ட ஆஸ்திரேலியர்"களென வர்ணிக்கப்படும் இவர்களிடம் தேசிய ரீதியில் நேற்று கான்பராவில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் மன்னிப்புக் கோரினார். கெவின் ரட் மன்னிப்புக் கோரும் பிரிவினரில் பிரித்தானியாவில் குடியேற்றப்பட்டு தற்போது ஆஸ்திரேலியாவிலேயே வசித்து வரும் 7000 பேரும் உள்ளடங்குவர்.


அப்போது அவர்கள் பட்ட வேதனைக்காக தான் மிகவும் மனம் வருந்துவதாகத் தெரிவித்த ரட் அப்பிள்ளைகளிடமும், அவர்களின் குடும்பத்தினரிடமும் தாம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்பதாகக் கூறினார்.


பெற்றோர் இறந்து விட்டதாகவும் மிகச் சிறப்பான வாழ்வு அவர்களுக்காகக் காத்திருப்பதாகவும் கூறி ஆயிரக்கணக்கான சிறுவர்கள் வலுக்கட்டாயமாக பிரிட்டனை விட்டு வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். மூன்று வயது சிறுவர்கள் கூட அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டமையைப் பெரும்பாலான பெற்றோர்கள் தெரிந்திருக்கவில்லை. சிறுவர் பராமரிப்பு அமைப்புகள் அரசாங்கத்துடன் இணைந்து இந் நடவடிக்கையில் ஈடுபட்டன.


இச் சிறுவர்களுக்குப் பண்ணை வேலை தொடர்பான கல்வி மட்டுமே வழங்கப்பட்டதுடன் இவர்கள் உடல், உள ரீதியிலும் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கும் உள்ளாக்கப்பட்டதுடன் பல கொடுமைகளுக்கும் இலக்காகினர்.


சென்ற ஆண்டு ஆஸ்திரேலியாவின் பழங்குடியினரிடம், குறிப்பாக திருடப்பட்ட தலைமுறையினரிடம் கெவின் ரட் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டிருந்தார். இப்பழங்குடியினர் தமது பெற்றோர்களிடம் இருந்து பலவந்தமாகப் பிரிக்கப்பட்டு அரச செலவில் வெள்ளையினத்தவர்களினால் பராமரிக்கப்பட்டு வந்தனர். இத்திட்டம் 1960களிலேயே கைவிடப்பட்டது.

மூலம்

[தொகு]