உள்ளடக்கத்துக்குச் செல்

பிரபல பாடகி ஏமி வைன்ஹவுஸ் 27வது அகவையில் மரணமடைந்தார்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சூலை 24, 2011

பிரித்தானியாவைச் சேர்ந்த சேர்ந்த ஆங்கிலப் பாடகியும், பாடலாசிரியையுமான ஏமி ஜேட் வைன்ஹவுஸ் தன் 27வது வயதில் மரணமடைந்தார். வடக்கு லண்டனில் கேம்டன் சதுக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று பிணமாகக் கிடந்தார்.


ஏமி வைன்ஹவுஸ்

இவர் எவ்வாறு இறந்திருக்கலாம் என்பது குறித்து காவல்துறையினர் விபரங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனாலும், அதிகளவில் போதை மருந்தை எடுத்துக் கொண்டதால் அவர் மரணமடைந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.


10 வயதாக இருக்கும் போதே தனது நண்பர்களுடன் சேர்ந்து பாப் பாடல்கள் பாடி புகழ் பெற்றார். 2003ல் வெளிவந்த இவரின் ஃபிராங் என்ற இசைத்தட்டு ஐக்கிய இராச்சியத்தில் பெரும் வெற்றி பெற்றது. இது மெர்க்குரி பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. 2006ல் வெளி வந்த பேக் டு பிளாக் என்ற இசைத்தட்டு 6 கிராமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு 5 விருதுகளை பெற்றது. இவரே 5 கிராமிய விருதுகளை வென்ற முதல் பிரித்தானியர் ஆவார். சிறந்த பிரித்தானிய பெண் கலைஞருக்கு வழங்கப்படும் பிரிட் விருதை 2007ல் பெற்றார்.இதன் மூலம் புகழ் பெற்ற இவர் போதை பழக்கத்தால் சீரழிய ஆரம்பித்தார். பிளேக் பீல்டர் என்பவர் உதவியோடு பாப் இசை உலகில் கால் வைத்த ஏமி பின்னர் அவரை விட்டுப் பிரிவதும் சேருவதுமாக இருந்தார். அவரைப் பிரிந்தபோதெல்லாம் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுப் போதைக்கு அடிமையானார். பின்னர் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.


இறுதியாக கடந்த மாதம் பெல்கிரேட் நகரில் ஒரு நிகழ்ச்சியில் பாடினார். ஆனால் அங்கும் போதை மருந்து உட்கொண்டு நிகழ்ச்சிக்கு வந்ததால் வாந்தி எடுத்தார். நிகழ்ச்சியில் முறையாகப் பாடவும் இல்லை. இதைத் தொடர்ந்து அவரது அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டிருந்தன. கடைசியாகக் கடந்த புதன்கிழமை அன்று இரவு காம்டென் நகரில் ஒரு விழாவில் கலந்து கொண்டு நடனமாடினார்.


மூலம்

[தொகு]