சல்மான் ருஷ்டியின் புதினம் இலங்கையில் இரகசியமான முறையில் படப்பிடிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, மே 20, 2011

சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் இரவின் சிறுவர்கள் (மிட்நைட்ஸ் சில்ரன்) என்ற புகழ்பெற்ற புதினம் இரகசியமான முறையில் இலங்கையில் படமாக்கப்பட்டு வெளியிடத் தயாராகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.


சல்மான் ருஷ்டி

இப்படப்பிடிப்பு குறித்து ஈரான் இலங்கையிடம் ஆட்சேபணை கிளப்பியதை அடுத்து இதன் தயாரிப்பு வேலைகள் நிறுத்தப்பட்டதெனினும், பின்னர் இலங்கையின் அரசுத் தலைவர் மகிந்த ராசபக்ச இத்தடையை நீக்கினார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


கனடாவைச் சேர்ந்த தீபா மேத்தா இத்திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். சமயக் குழுக்களின் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு அஞ்சியே இந்தியா, அல்லது பாக்கித்தானில் படப்பிடிப்பு நடத்தாமைக்குக் காரணம் என மேத்தா தெரிவித்தார். சல்மான் ருஷ்டி சாட்டானிக் வேர்சசு என்ற புதினம் எழுதியதை அடுத்து இப்புதினம் இசுலாமைப் பழி தூற்றுகிறது என்று கூறி உலகில் பல முசுலிம்கள் ருஷ்டிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஈரான் தலைவர் அயத்தொல்லா கொமெய்னி ருஷ்டியை கொலை செய்யவேண்டும் என்று ஒரு கட்டளை வெளியிட்டார். சப்பானில் இப்புதினத்தை மொழிபெயர்ப்பு செய்தவர் 1991இல் கொல்லப்பட்டார்.


ருஷ்டியின் மிட்நைட்ஸ் சில்ரன் என்னும் புதினம் இந்தியாவின் விடுதலைக்கு முன்னும் பின்னுமான வரலாற்றுடன் சம்பந்தப்பட்டது. இந்தியா விடுதலை அடைந்த 1947 இல் பிறந்த சலீம் சினாய் என்பவரின் கதையை அது சொல்கிறது. இப்புதினம் 1993 ஆம் ஆண்டில் சிறந்த நூலுக்கான புக்கர் விருது பெற்றிருந்தது. திரைப்படத்துக்கு Winds of Change என்ற பெயர் இடப்பட்டுள்ளது. இதில் சத்தியா பாபா, சிரியா சரன், சபானா அஸ்மி மற்றும் பலர் நடித்துள்ளனர். அடுத்த ஆண்டில் இது வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இலங்கையில் உள்ள இசுலாமிய அமைப்புகள் இப்படப்பிடிப்பு குறித்து தமது கோபத்தை வெளியிட்டுள்ளதாக கொழும்பு பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.


மூலம்[தொகு]