பூமியைத் தாக்கும் சூரியப் புயல்

விக்கிசெய்தி இலிருந்து

புதன், சனவரி 25, 2012

2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு சூரிய அதிர்வலைகள் அல்லது சூரியப் புயலினால் உயர்-ஆற்றல் துகள்கள் பூமியைத் தாக்கி வருவதாக அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர். இப்புயலினால் குறிப்பாக செயற்கைக்கோள்கள், மற்றும் விண்வெளி வீரர்களின் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. அத்துடன் துருவங்களிற்குக் கிட்டவாகச் செல்லும் வானூர்திகளும் பாதிப்புக்குள்ளாகலாம்.


சூரியனில் இருந்து ஒளிவட்டப் பொருள் வெளியேற்றம்.

கடந்த திங்கட்கிழமை ஜிஎம்டி நேரம் 0400 மணிக்கு சூரியனின் மேற்புறத்தில் இருந்து புறப்பட்ட சூரிய அதிர்வலை ஒரு மணி நேரத்தில் பூமியைத் தாக்கியது. பூமியின் மீது இதன் தாக்கம் இன்று புதன்கிழமை வரை உணரப்படும் என நாசா வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.


முக்கியமாக வடமுனை ஒளி வழக்கமாகத் தெரியும் இடங்களை விட மேலும் தெற்குப் பக்கமாகத் தெரியும். பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் நிலை கொண்டுள்ள ஆறு விண்வெளி வீரர்களுக்கும் பாதிப்பு ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை என நாசா தெரிவித்துள்ளது.


சூரியனின் வளிமண்டலத்தில் சேகரிக்கப்பட்டுள்ள காந்த ஆற்றல் சடுதியாக வெளிவிடப்படுவதால் இந்த சூரியப் புயல் உருவாகிறது. ஒளிவட்டப் பொருள் வெளியேற்றம் கிட்டத்தட்ட 2,200 கிமீ/செக் வேகத்தில் செல்கிறது. இது பூமியின் காந்தக்கோளத்தை செவ்வாய்க்கிழமை 1400 மணியளவில் (+/- 7 மணி) தாக்கும் என நாசா எதிர்வு கூறியிருக்கிறது.


1972 இல் இவ்வாறான சூரியப் புயல் அமெரிக்காவின் இலினோய் மாநிலத்தைத் தாக்கி தகவல் தொடர்புகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருந்தது. 1989 ஆம் ஆண்டில் கனடாவின் கியூபெக் மாநிலத்தில் 6 மில்லியன் மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டது.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]