உள்ளடக்கத்துக்குச் செல்

சமோவா நாட்காட்டி ஒரு நாள் முன்னே செல்ல இருக்கிறது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், மே 10, 2011

தெற்கு பசிபிக் நாடான சமோவா தனது பொருளாதாரத்தை விருத்தி செய்து கொள்வதற்காக தனது நாட்காட்டியை இவ்வாண்டு இறுதியில் இருந்து ஒரு நாள் முன்னோக்கி மாற்ற இருக்கிறது.


சமோவா தீவு

தற்போது பன்னாட்டு தேதி எல்லைக் கோட்டின் கிழக்குப் பகுதியில் இருக்கும் சமோவா இனிமேல் அதன் மேற்குப் பகுதிக்கு மாற இருக்கிறது. இதன் மூலம் அதன் அண்டை நாடுகளான ஆத்திரேலியா, மற்றும் நியூசிலாந்து நாடுகளுடனான வணிக உறவு இலகுவாக அமையும் என அது எதிர்பார்க்கிறது.


சிட்னி நகரின் நேரத்தில் இருந்து 29 மணி நேரம் பின்னோக்கி இருக்கும் சமோவா இவ்வாண்டு டிசம்பர் 29 ஆம் நாளில் இருந்து 3 மணி நேரம் முன்னோக்கி இருக்கும்.


119 ஆண்டுகளுக்கு முன்னர் சமோவா எதிர்த்திசையில் சென்று கொண்டிருந்தது. அமெரிக்கா, மற்றும் ஐரோப்பாவுடன் அதன் வணிகத் தொடர்புகளை விருத்தி செய்வதற்காக கிழக்குப் பகுதிக்கு மாறியது. ஆனாலும் பின்னாளில் ஆத்திரேலியா, மற்றும் நியூசிலாந்துடன் அதன் வணிகத் தொடர்புகள் அதிகரிக்கத் தொடங்கியது.


"நியூநிலாந்து, ஆத்திரேலியாவுடன் வணிகத்தில் ஈடுபடும்போது நாம் வாரத்திற்கு இரண்டு தொழில் நாட்களை இழக்கிறோம்," என்றார் சமோவாப் பிரதமர் துலீப்பா மலீலிகாவொய்.


"இங்கு வெள்ளிக்கிழமையாக இருக்கும் போது, நியூசிலாந்தில் சனிக்கிழமை, நாம் ஞாயிற்றுக்கிழமை தேவாலயத்திற்குச் செல்லும் போது சிட்னி, பிறிஸ்பேன் நகரங்கள் வர்த்தகத்தை ஆரம்பித்து விடுகின்றன," என்றார் அவர்.


நியூசிலாந்திற்கும் ஹவாயிற்கும் அண்ணளவாக நடுவில் அமைந்திருக்கும் சமோவாத் தீவின் மக்கள் தொகை 180,000 ஆகும்.


மூலம்

[தொகு]