உள்ளடக்கத்துக்குச் செல்

ஐசுலாந்தில் எரிமலை வெடிப்பின் சாம்பல் பரவியதால் ஐரோப்பிய விமானசேவைகள் பாதிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, ஏப்பிரல் 16, 2010

சென்ற புதன்கிழமை அன்று ஐசுலாந்தில் உள்ள Eyjafjallajökull என்ற எரிமலை வெடிக்க ஆரம்பித்ததில் பரவிய சாம்பல் மண்டலம் அருகில் உள்ள ஐக்கிய இராச்சியம் வரை பரவியுள்ளதால் ஐரோப்பாவுக்கான பல விமானசேவைகள் இன்று இரண்டாவது நாளாகப் பாதிப்படைந்துள்ளன.


வியாழன் அன்று 5,000 விமானசேவைகள் இடைநிறுத்தப்பட்டன. அயர்லாந்து முதல் பின்லாந்து வரையான வான்வெளி மூடப்பட்டுள்ளது. எனினும், எரிமலையினால் ஏற்பட்ட சாம்பல் புகை அங்குள்ள பொதுமக்களுக்கு சுகாதாரப் பாதிப்பெதையும் ஏற்படுத்தவில்லை.

சாம்பற்புகை 55,000 அடி உயரம் வரையில் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதில் அடங்கியிருக்கும் பாறைகளின் துகள்கள், கண்ணாடி, மற்றும் மண் ஆகியவற்றால் விமானங்களின் இயந்திரங்கள் பழுதடையக் கூடிய வாய்ப்புகள் உள்ளன என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.


இதற்கிடையே இந்த எரிமலை வெடிப்பால் பனிமலை ஒன்று வேகமாக உருகி வருவதால் அப்பகுதியில் வாழ்ந்து வந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.


ஆனால் வா‌னிலை மைய அதிகாரிகளோ, இந்தப் புகை மூட்டம் முழுதும் விலக சில நாட்கள் பிடிக்கும் என்று கூறுகின்றனர்.


ஏற்கனவே 1982ஆம் ஆண்டும், 1989ஆம் ஆண்டும் எரிமலை சாம்பற்புகையில் சிக்கிய இரு விமானங்களிலும் அதன் 4 எஞ்சின்களும் பழுதடைந்து பெருமாபாடு பட்டு தரையிறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


ஒரே மாதத்தில் இரண்டாவது தடவையாக இந்த எரிமலை சென்ற புதன்கிழமை ஏப்ரல் 14 ஆம் நாள் வெடித்தது. வளிமண்டலத்தில் 11 கிமீ தூரம் வரையில் அதன் தூசுகள் கிளம்பின. இதனால் வெளிப்பட்ட வெப்பத்தினால் சுற்றவர இருந்த பனிக்கட்டிகளும் உருக ஆரம்பித்தன. இதனால் உருகிய நீரும் பனிப்பாறைகளில் இருந்து வெளியே வர ஆரம்பித்ததாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.


800 பேர் வரையில் வீடுகளில் இருந்து பாதுகாப்பான வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். வியாழன் அன்று வெள்ளப்பெருக்கு குறைந்திருந்தாலும், எரிமலையில் இருந்து வெளிவரும் தூசுகள் ஐரோப்பாவின் ஏனைய இடங்களுக்குப் பரவ ஆரம்பித்தன.


கடைசியாக மார்ச் 21 ஆம் நாள் இந்த எரிமலை வெடித்திருந்தது. 1821 ஆம் ஆண்டில் இந்த எரிமலை வெடித்தபோது அதன் தாக்கம் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் வரை நீடித்திருந்தது.

தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]