துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், செப்டம்பர் 22, 2009, கொழும்பு:


காவல்துறையினரின் கடும் தாக்குதலை சகிக்க முடியாமலேயே அவர்கள் கொண்டுவந்த ஆவணங்களில் கையொப்பமிட நேர்ந்ததாக நோத் ஈஸ்டன் மன்த்லி என்ற இதழின் வெளியீட்டாளரான வெற்றிவேல் யசீகரன் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று சாட்சியமளித்தார்.


பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் திசைநாயகத்துடன் சேர்ந்து குற்றம் சுமத்தப்பட்டுள்ள அந்த இதழின் வெளியீட்டாளரான வெற்றிவேல் யசீகரன் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக இன்று சாட்சியமளித்தார்.


யசீகரன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கொல்லுரெ என்பவருக்கு வழங்கியதாக கூறப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அவர் சுயேச்சையாக வழங்கியதா என்பதை அறியும் நோக்கில் இந்த விசாரணை நடந்தது.


2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் திகதி தன்னையும் தனது மனைவியையும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைதுசெய்து தன்னை தாக்கி கடும் இம்சைகளுக்குட்படுத்தி பல்வேறு கடதாசிகளில் தனது கையொப்பத்தை பலவந்தமாக பெற்றதாக யசீகரன் சாட்சியில் தெரிவித்தார்.


தான் ஒருபோதும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கொல்லுரே என்பவருக்கு வாக்குமூலம் அளிக்கவில்லை என்றும் அவரை முதற்தடவையாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில், இந்த வழக்கின்போதே கண்டதாகவும் யசீகரன் அரச சட்டவாதியின் குறுக்குகேள்விகளுக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார்.

தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]

  • பிபிசி தமிழோசை