பதவியில் இருந்து அகற்றப்பட்ட கிர்கிஸ்தான் அரசுத்தலைவர் நாட்டை விட்டு வெளியேறினார்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, ஏப்பிரல் 16, 2010

கிர்கிஸ்தானில் சென்ற வாரம் இடம்பெற்ற புரட்சியின் போது பதவியில் இருந்த அகற்றப்பட்ட அரசுத்தலைவர் குர்மான்பெக் பாக்கியெவ் நேற்றுத் தமது பதவியைத் துறந்து விட்டு அயல் நாடான கசக்ஸ்தானுக்குத் தப்பிச் சென்றார். நாட்டில் திரத்தன்மையை இது பெரிதும் மேம்படுத்தும் என கச்க்ஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவித்தார்.


குர்மான்பெக் பாக்கியெவ் (2006)
இடைக்கால அர்சுத் தலைவர் ரோசா ஒட்டுபன்பாயெவா

பாக்கியெவின் சகோதரர் சானிபெக் என்பவரைக் கைது செய்ய இடைக்கால அரசு பிடியாணை பிறப்பித்திருக்கிறது. இவர் முன்னாள் அரசில் அரசுத்தலைவருக்கான பாதுகாப்புப் படையின் தலைவராக இருந்தவர். ஏப்ரல் 7 ஆம் நாள் தலைநகர் பிஷ்கெக்கில் இடம்பெற்ற அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொதுமக்களை நோக்கிச் சுடுவதற்கு உத்தரவிட்டவர் இவரே எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


பாக்கியெவ் ஏறிச் சென்ற விமானத்தில் அவரது சகோதரர் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. பாக்கியெவின் மகன் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறியிருந்தார். முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பக்தீபெக் காலியெவ் கைது செய்யப்பட்டுள்ளார்.


நேற்றுக் காலையில் நாட்டின் தெற்குப் பகுதியில் பாக்கியெவின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டப்பேரணி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது சூட்டுச் சத்தங்கள் கேட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனை அடுத்தே பாக்கியெவ் அங்கிருந்து வெளியேறினார்.


மனித உரிமை ஆர்வலரான அசீசா ஆப்திரசுலோவா கருத்துத் தெரிவிக்கையில், “நேற்றைய எதிர்ப்புக் கூட்டத்தில் 5,00 பேர் வரையில் கலந்து கொண்டனர். பாக்கியெவ் அவர்களுக்கு மத்தியில் உரையாடத் தொடங்கும் போது இடைக்கால அரசின் ஆதரவாளர்கள் அவரை நோக்கி ஓடி வந்தார்கள். பாக்கியெவின் பாதுகாவலர்கள் வானை நோக்கிச் சுட்டார்கள் என்றும் அந்நேரத்தில், பாக்கியெவ் வாகனம் ஒன்றில் ஏற்றப்பட்டு நகரை விட்டு வெளியேற்றப்பட்டார். இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை”, என்றார்.


இதற்கிடையில், அமெரிக்க அரசத்தலைவர் பராக் ஒபாமா ஒட்டுன்பாயெவா தலமையிலான கிர்கிஸ்தானின் இடைக்கால அரசுக்கு தமது ஆதரவைத் தெரிவித்தார். கிர்கிஸ்தானில் உள்ள அமெரிக்காவின் வான்தளத்துக்கான குத்தகையை மேலும் ஓராண்டு காலம் நீடிக்க இடைக்கால அரசு இன்று தீர்மானித்துள்ளது.

தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]