அகதிகளை பசிபிக் நாடுகளில் தடுத்து வைக்கும் சட்டமூலத்திற்கு ஆத்திரேலிய நாடாளுமன்றம் அனுமதி

விக்கிசெய்தி இலிருந்து

புதன், ஆகத்து 15, 2012

படகுகளில் சட்டவிரோதமாக ஆத்திரேலியக் கடற்பரப்புக்குள் நுழையும் அகதிகளை பப்புவா நியூ கினி, நவூரூ ஆகிய நாடுகளில் தடுத்து வைத்து அவர்களின் அகதி விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதற்கான சட்டமூலம் ஆத்திரேலிய நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டது.


நிபுணர் குழு பரிந்துரைக்கேற்ப ஆத்திரேலிய நாடாளுமன்றத்தின் கீழவை நேற்று செவ்வாய்க்கிழமை இச்சட்டமூலத்தை நிறைவேற்றியது. இச்சட்டமூலம் அடுத்த சில நாட்களில் மேலவைக்கு (செனட் சபை) கொண்டு செல்லப்படவிருக்கிறது. ஆளும் தொழிற்கட்சியும், எதிர்க்கட்சியும் இச்சட்டமூலத்தை ஆதரித்திருப்பதால் மேலவை உறுப்பினர்கள் இதற்கு ஆதரவாக வாக்களிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இருவர் மட்டுமே இச்சட்டமூலத்திற்கு எதிர்த்து வாக்களித்தனர்.


2008 ஆம் ஆண்டில் அப்போதைய தொழிற்கட்சிப் பிரதமர் கெவின் ரட் வெளிநாடுகளில் இயங்கிய தடுப்புமுகாம்களை காலவரையறையின்றி மூடினார்.


கடந்த திங்கட்கிழமை வரை இச்சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த பிரதமர் ஜூலியா கிலார்டு "நரூ மற்றும் பப்புவா நியூ கினியில் ஆத்திரேலிய அகதிகளுக்கான தடுப்பு முகாம்கள் இன்னும் ஒரு மாதத்திற்குள் இயங்கத் தொடங்கும் என நம்புகிறோம்," எனக் கூறினார்.


படகுமூலம் வரும் அகதிகள் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் பசிபிக் தீவுகளில் இரு ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்பதால், தம்மை ஆத்திரேலியாவுக்கு கொண்டுசெல்வதற்காக கடத்தல்காரர்களுக்குப் பணம் வழங்குவதற்கு முன் மக்கள் இருதடவை சிந்திப்பார்கள் என ஆத்திரேலிய அரசு நம்புகிறது.


மூலம்[தொகு]