நேபாளத்தில் வெளிநாட்டுப் பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் வீழ்ந்ததில் 14 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், ஆகத்து 24, 2010

நேபாளத் தலைநகருக்கு வெளியே பயணிகள் விமானம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த அனைத்து 14 பேரும் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தலைநகர் கத்மண்டுவுக்குத் தெற்கே 80 கிமீ தொலைவில் சிக்காப்பூர் என்ற கிராமத்தில் இந்த சிறியரக விமானம் வீழ்ந்து நொறுங்கியது. எவரெஸ்ட் சிகரத்தின் பிரபலமான சுற்றுலாத் தளமான லுக்லா நோக்கி இவ்விமானம் பறந்து கொண்டிருக்கையிலேயே விபத்துக்குள்ளானது. அக்னி என்ற பெயருள்ள இந்த விமானம் பல துண்டுகளாகப் பிளந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.


இவ்விமானத்தில் ஆறு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் சென்றதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவர்களில் நான்கு அமெரிக்கர்கள், ஒரு சப்பானியரும் அடங்குவர். பிரித்தானியர் ஒருவரும் கொல்லப்பட்டதை பிரித்தானியத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.


மோசமான காலநிலை நிலவியதால் இவ்விமானத்தை மீண்டும் கத்மண்டுவுக்குத் திரும்ப செய்தி அனுப்பபட்டதாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


2008 ஆம் ஆண்டில் லுக்லாவில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 18 பேர் கொல்லப்பட்டனர்.

மூலம்[தொகு]