உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியாவில் மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டனர்

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், மே 18, 2010

சத்தீஸ்கரில் இருந்து ஏனைய செய்திகள்
இந்தியாவில் சத்தீஸ்கரின் அமைவிடம்

சத்தீஸ்கரின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

இந்தியாவில் சத்தீஸ்கர் மாநிலத்தில் பயணிகள் பேருந்து ஒன்றில் மாவோயிசப் போராளிகள் நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஒரு கண்ணிவெடித் தாக்குதலில் காவல்துறையினர், பொதுமக்கள் எனக் குறைந்தது முப்பத்தைந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.


சத்தீஸ்கர் மாநிலம் தாண்டேவாடா பகுதியில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் 11 பேர் பொலிசார் என்று தெரிகிறது.


"சுமார் 40 பேர் பயணித்த பேருந்து ஒன்று நிலக்கண்ணிவெடியினால் தாக்கப்பட்டது," என உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


கொல்லப்பட்ட காவல்துறையினர் அனைவரும் மாவோயிசத் தீவிரவாதத்துக்கு எதிராகப் போரிடுவதற்காக அரசுப் படைக்குச் சேர்த்துக்கொள்ளப்பட்ட பொது மக்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.


கடந்த சில மாதங்களாக மாவோயிஸ்டுகள் அரசாங்கப் படைகள் இடையில் கடும் சண்டைகள் நடந்துவருகின்ற இடம் இது. சென்ற மாதம் இதே பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 76 பேர் கொல்லப்பட்டனர்.


பல ஆண்டுகளாக இம்மாநிலத்தில் இடம்பெற்று வரும் தீவிரவாதத் தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.


சென்ற திங்கட்கிழமை சத்தீஸ்கரின் காட்டுப் பகுதி ஒன்றில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் 6 பொது மக்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இவர்கள் அரசின் உளவாளிகள் எனக் குற்றம் சாட்டப்பட்டு மாவோயிசவாதிகளால் முன்னதாகக் கடத்தப்பட்டவர்கள் ஆவர்.


நக்சலைட்டுகள் என அழைக்கப்படும் மாவோயிசத் தீவிரவாதிகள் கிராமப்புற ஏழை மக்கள் அரசினால் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி அவர்களின் மேம்பாட்டுக்காகப் போராடுவதாகக் கூறுகிறார்கள்.

மூலம்

[தொகு]