சீக்கியர்களுக்கு எதிரான 1984 வன்முறைகளை 'இனப்படுகொலை' என அறிவிக்க ஆத்திரேலியாவில் விண்ணப்பம்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, நவம்பர் 2, 2012

1984 ஆம் ஆண்டில் இந்தியாவில் சீக்கிய மக்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளை இனப்படுகொலைகளாக அறிவிக்க ஆத்திரேலிய நாடாளுமன்றத்தில் கோரப்பட்டுள்ளது.


ஆத்திரேலிய நாடாளுமன்றம்

இவ்விண்ணப்பத்தை நேற்று வியாழக்கிழமை தாராண்மைவாதக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாரன் என்செட்ச் என்பவர் அவையில் சமர்ப்பித்தார். இவ்வன்முறை "'சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை' எனக் குறிப்பிடப்படுவது சீக்கிய சமூகத்துக்கு இது முடிவுறாத பிரச்சினையாக இருக்கும்", என அவர் தனது விண்ணப்பத்தில் கூறியுள்ளார். இவ்விண்ணப்பத்தில் 4,453 பேர் கையெழுத்திட்டுள்ளனர். அத்துடன் 1984 வன்முறைகளுக்குப் பொறுப்பானவர்கள் மீது "தகுந்த நடவடிக்கை" எடுக்க இந்தியாவை ஆத்திரேலிய அரசு வற்புறுத்த வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் அவரது சீக்கிய மெய்ப்பாதுகாவலர் இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து இடம்பெற்ற வன்முறைகளில் கிட்டத்தட்ட 3,000 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்திரா காந்தியின் காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்களும் இவ்வன்முறைகளுக்கு உடந்தையாக இருந்தார்கள் என அண்மையில் அரசு மேற்கொண்ட விசாரணைகளின் முடிவில் அறியப்பட்டிருந்தது. ஆனாலும் வன்முறைகள் நடைபெற்று 28 ஆண்டுகள் ஆகியும் இதுவரையில் எவருமே தண்டிக்கப்படவில்லை.


அம்ரித்சர் நகரில் உள்ள பொற்கோயிலில் மறைந்திருந்த காலிஸ்தான் தனிநாட்டுக்காக போராடி வந்த சீக்கியப் போராளிகளை அங்கிருந்து அகற்றுவதற்காக பொற்கோயில் மீது இந்திய இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார்.


வடக்கு குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வாரன் என்செட்ச் இவ்வறிக்கையை நேற்று ஆத்திரேலியத் தலைநகர் கான்பராவில் உள்ள நாடாளுமன்றத்தில் படிக்கும் போது நூற்றுக்கணக்கான ஆத்திரேலிய சீக்கிய சமூகத்தினர் நாடாளுமன்றத்துக்கு வெளியே கூடியிருந்தனர்.


மூலம்[தொகு]