ஆஸ்திரேலியாவின் அகதிகளுக்கான உடன்பாட்டை சாடுகிறார் நவநீதம் பிள்ளை

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, மே 27, 2011

ஆத்திரேலியாவுக்குள் தஞ்சம் புகும் படகு அகதிகளை மலேசியாவிற்கு அனுப்புவதற்கு இரு நாடுகளும் இணங்கியுள்ளமையிலுள்ள சட்டத்தன்மை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை கேள்வி எழுப்பியுள்ளார்.


நவநீதம் பிள்ளை

ஆத்திரேலியாவிற்குள் படகுகள் மூலம் நுழைந்த 800 அகதிகளை மலேசியாவிற்கு அனுப்புவதற்கு அவுஸ்திரேலியா முன்வைத்திருக்கும் திட்டம் அகதிகளுக்கான சட்ட விதிகளை வெளிப்படையாக மீறும் செயலாகுமென அவர் குறிப்பிட்டுள்ளார். புகலிடக் கோரிக்கையாளர்கள் விடயத்தில் கூடிய மனிதாபிமானத்தை கடைப்பிடிக்குமாறும் அவர் ஆத்திரேலியாவைக் கோரியுள்ளார்.


மலேசியா துன்புறுத்தல்கள் சாசனம் மற்றும் அகதிகள் தொடர்பான சாசனத்தினை உறுதிப்படுத்தாத நாடுகளில் ஒன்றாகும். அவ்வாறான நடு ஒன்றுக்கு தனிநபர்களை அவுஸ்திரேலியா அனுப்ப முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் மலேசியாவில் மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியாது. அத்துடன் பன்னாட்டுத் தரக் கட்டுப்பாடுகளை கொண்டிருக்கும் ஆத்திரேலியா இவ்வாறான திட்டங்களுடன் ஒத்துப்போக முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.


மக்களை எவ்வாறு திருப்பி அனுப்புவது என்பது முதலாவது தெரிவாக இருக்கக் கூடாது. மக்களை எவ்வாறு ஏற்பது என்பதுதான் முதலாவது தெரிவாக இருக்க வேண்டும் எனவும் நவநீதம்பிள்ளை சுட்டிக்காட்டியுள்ளார்.


இதே வேளையில், படகுகள் மூலம் ஆத்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் அகதிகளை தடுப்பு முகாம்களில் நீண்ட காலம் தடுத்து வைத்திருக்க்கும் ஆத்திரேலியாவின் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு அந்நாட்டின் மனித உரிமை கண்காணிப்பகம் கேட்டுள்ளது. தடுப்பு முகாம்களில் உள்ளோரிடன், தற்கொலைகள், வன்முறைகள், மன அழுத்தம் போன்றவை அதிகமாகக் காணப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


மூலம்[தொகு]