உள்ளடக்கத்துக்குச் செல்

1981 இனப்படுகொலைகளை விசாரணை செய்ய எல் சால்வடோருக்கு மனித உரிமைகளுக்கான நீதிமன்றம் பணிப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், திசம்பர் 11, 2012

உள்நாட்டுப் போர்க்காலத்தில் நிகழ்த்தியதாகக் கூறப்படும் படுகொலைகளை விசாரணை செய்யுமாறும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறும் எல் சால்வடோருக்கு அமெரிக்காக்களுக்கிடையேயான மனித உரிமைகள் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1981 ஆம் ஆண்டில் இடம்பெற்ற எல் மொசோட்டே படுகொலைகளில் 1,000 பேர் வரையில் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.


1981 எல் மசோட்டே இனப்படுகொலை நினைவுச் சின்னம்

இப்படுகொலைகளுக்காக அந்நாட்டின் அரசுத் தலைவர் மொரீசியோ ஃபியூனெசு இவ்வாண்டு ஆரம்பத்தில் பொது மன்னிப்புக் கோரியிருந்தார். இப்படுகொலைகள் "இலத்தீன் அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் கொடிய படுகொலைகள்," என அவர் அப்போது கூறியிருந்தார். 1980 முதல் 1992 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற 12 ஆண்டு கால உள்நாட்டுப் போரில் 75,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.


கொஸ்டா ரிக்காவைத் தலைமையகமாகக் கொண்ட அமெரிக்காக்களுக்கிடையேயான மனித உரிமைகள் நீதிமன்றம் இத்தீர்ப்பை நேற்று திங்கட்கிழமை வழங்கியிருந்தது. எல் மொசோட்டே நகரையும் அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் இடம்பெற்ற படுகொலைகள் திட்டமிட்டு நடத்தப்பட்டவை என நீதிமன்றம் கூறியுள்ளது.


1981 டிசம்பர் 11 முதல் 13 வரையான காலப்பகுதியில், இடதுசாரிப் போராளிகளுக்கு ஆதரவு வழங்குவதாகக் கூறி எல் மொசோட்டே நகர மக்கள் ஆயிரத்துக்கும் அதிகமானோரை இராணுவத்தினர் படுகொலை செய்தனர். கொல்லப்பட்டவர்களில் அரைவாசிக்கும் அதிகமானோர் சிறுவர்கள் ஆவர்.


440 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது, ஆனாலும் இறந்தோர் எண்ணிக்கை அதிகமாகும் என உறுதியான தகவல்கள் தெரிவிப்பதாக நீதிமன்றம் கூறியது.


இப்படுகொலைகளில் சம்பந்தப்பட்டோர் எவரும் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. 1992 இல் இடம்பெற்ற அமைதி உடன்பாட்டில் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.


தீவிர இடதுசாரியான மொரீசியோ ஃபியூனெசு 2009 ஆம் ஆண்டில் அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1980களில் அமெரிக்க சார்பு அரசை எதிர்த்துப் போரிட்ட ஃபாரபுண்டோ பார்ட்டி தேசிய விடுதலை முன்னணி (FMLN) என்ற மார்க்சியப் போராளிக் குழுவைச் சேர்ந்தவர்


மூலம்

[தொகு]