பிரேசில் சண்டா மரியா நகர இரவு விடுதி தீப்பற்றியதில் 232 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சனவரி 28, 2013

பிரேசிலின் தெற்குப் பகுதியில் சாண்டா மரீயா என்ற நகரில் அமைந்துள்ள பிரபலமான இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கி குறைந்தது 232 பேர் உயிரிழந்துள்ளனர் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இறந்தவர்களில் பலர் பல்கலைக்கழக மாணவர்கள் எனக் கூறப்படுகிறது.


விடுதியில் இடம்பெற்ற நடன நிகழ்ச்சி ஒன்றில் இசைக்குழுவினர் திடீரென வாணவெடிகளை எறிந்ததிலேயே தீ பரவியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பலர் நச்சு வாயுவை சுவாசித்ததனாலும், மேலும் பலர் நெரிசலில் சிக்கியும் உயிரிழந்தனர்.


நேற்று அதிகாலை 2 மணியளவில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்தோர் தொகை மேலும் அதிகரிக்கலாம் என பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் எரிகாயங்களுக்கு உள்ளாயினர்.


சிலியில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருந்த அரசுத்தலைவர் தில்மா ரூசெஃப் பயணத்தை இடை நிறுத்தி பிரேசில் திரும்பியுள்ளார்.


சாண்டா மரியாவில் அமைந்துள்ள கிஸ் கிளப் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமானதாகும். வார இறுதி நாட்களில் இங்கு 2,000 முதல் 3,000 வரையானோர் கூடுகின்றனர். பல்கலைக்கழகங்களுக்குப் பிரபலமான இந்நகரத்தில் சாண்டா மரியா நடுவண் பல்கலைக்கழகம் உட்பட பல தனியார் பல்கலைக்கழகங்களும், உயர் கல்வி நிலையங்களும் அமைந்துள்ளன. 27,000 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை, காவல் துறை சனவரி 28 அன்று கைது செய்துள்ளது.


மூலம்[தொகு]