உள்ளடக்கத்துக்குச் செல்

மாலி சர்ச்சை: முதற் தடவையாகத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, பெப்பிரவரி 8, 2013

காவோ என்ற வடக்கு மாலி நகரில் தற்கொலைக் குண்டு ஒன்று வெடித்ததில் ஒருவர் காயமடைந்ததாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். மாலியில் இவ்வாறான தாக்குதல் நடைபெறுவது இதுவே முதற்தடவையாகும்.


இன்று காலை 6:00 மணியளவில் இராணுவத்தினரை நோக்கி விசையுந்து ஒன்றைச் செலுத்தி வந்த போராளி ஒருவர் தன்னுடலில் கட்டப்பட்டிருந்த குண்டு ஒன்றை வெடிக்க வைத்தார்.


இதேவேளையில், மாலியின் தலைநகர் பமாக்கோவில் மாலிப் படையினரிடையே துப்பாக்கிச் சூட்டு நிகழ்வுகள் இன்று இடம்பெற்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவத்தினர் சிலர் சிறப்பு துணை இராணுவமுகாம் ஒன்றைத் தாக்கியதில் பல துணை இராணுவத்தினர் காயமடைந்தனர்.


வடக்கு மாலியில் காவோ நகரமே மக்கள் அதிகம் வாழும் நகரமாகும். கடந்த ஆண்டு இந்நகரை போராளிகள் தம் வசப்படுத்தியிருந்தனர். கடந்த சனவரி 11 இல் போராளிகளை அடக்க பிரான்சு தனது 4,000 படையினரை வடக்கு மாலிக்கு அனுப்பியிருந்தது.


காவோவுக்கு அருகில் நிலக்கண்ணி ஒன்று வெடித்ததில் நான்கு மாலி இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.


மூலம்

[தொகு]