உள்ளடக்கத்துக்குச் செல்

வடக்கு மாலி தாக்குதல்களில் சாட் இராணுவத்தினர் உட்படப் பலர் உயிரிழப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, பெப்பிரவரி 23, 2013

வடக்கு மாலியின் மலைப் பிரதேசம் ஒன்றில் போராளிகளுடன் இடம்பெற்ற சண்டையில் சாட் நாட்டைச் சேர்ந்த 13 இராணுவத்தினரும், 65 இசுலாமியப் போராளிகளும் கொல்லப்பட்டதாக சாட் இராணுவ வட்டாரம் அறிவித்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை சண்டை இடம்பெற்ற இஃபோகாசு மலைப் பிரதேசத்தில் பெருமளவு இசுலாமியப் போராளிகள் ஒளிந்துள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.


2012 ஆம் ஆண்டில் மாலியின் வடக்குப் பிரதேசத்தைக் கைப்பற்றிய இசுலாமியப் போராளிகளை விரட்டும் நோக்கில் கடந்த மாதம் பிரான்சு நாடு அங்கு பெரும் தாக்குதல் ஒன்றை ஆரம்பித்திருந்தது. அங்கு ஒளிந்திருக்கும் இசுலாமியப் போராளிகளின் நடமாட்டத்தை அறிந்து கொள்வதற்காகத் தமது ஆளில்லா விமானங்கள் நைஜர் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமெரிக்கா முன்னதாக அறிவித்திருந்தது.


இசுலாமியப் போராளிகள் கடந்த சில வாரங்களில் மாலியின் வடக்கு நகரான கிடாலின் பாலைவனப் பகுதியான இஃபோகாசு மலைப் பிரதேசத்திற்கு விரட்டப்பட்டிருந்தனர். இப்பகுதி அல்ஜீரியாவின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இம்மாத ஆரம்பத்தில் 1,800 சாட் நாட்டு இராணுவத்தினர் கிடால் நகருக்கு அனுப்பப்பட்டிருந்தனர்.


இதே வேளையில், மாலியின் வடக்கே காவோ நகரில் பிரான்சின் துணையுடன், மாலிப் படையினர் இசுலாமியப் போராளிகளுடன் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.


அடுத்த மாதமளவில் பிரான்சு தனது 4,000 படையினரை மாலியில் இருந்து வெளியேற்றுவதற்குத் தீர்மானித்துள்ளது. இதற்குப் பதிலாக ஐநா தலைமையிலான ஆப்பிரிக்க அமைதிகாக்கும் படையினர் அங்கு அனுப்பப்படுவர் எனத் தெரிய வருகிறது.

மூலம்

[தொகு]