ஆப்கானித்தானில் நேட்டோ வான் தாக்குதலில் பிரபல நடிகர் உயிரிழந்தார்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, மார்ச்சு 10, 2013

ஆப்கானித்தானின் தெற்குப் பகுதியில் நேட்டோ படையினர் நடத்தின் வான் தாக்குதல் ஒன்றில் நாட்டின் பிரபலமான நடிகர் நசார் முகமது எல்மாண்டி என்பவர் கொல்லப்பட்டார். எல்மாண்டி தீவிரவாதம் மற்றும் போதைப் பொருள் கடத்தல் போன்றவற்றுக்கு எதிரான பரப்புரைத் திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர்.


ஆப்கானித்தானின் எல்மாண்ட் மாகாணத்தில் அரசுக்கு உளவு சொல்வதாகக் குற்றம் சாட்டப்பட்டு இவர் போராளிகளால் கடத்தப்பட்டார். இவருடன் மூன்று போராளிகளும் கொல்லப்பட்டனர்.


தனது நோய்வாய்ப்பட்ட சகோதரி ஒருவரைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காக கொஸ்காபி என்ற கிராமத்திற்குச் சென்ற போதே இவர் போராளிகளால் கடத்தப்பட்டார். நேட்டோ படையினர் தாக்குதல் நடத்திய போது எல்மாண்டியை போராளிகள் விசாரணை செய்து கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இத்தாக்குதலில் 3 போராளிகளுடன் எல்மாண்டியும் கொல்லப்பட்டார். எல்மாண்டியின் உடன் உருக்குலைந்த நிலையில் கைப்பற்றப்பட்டதாக அவரது சகோதரர் செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார்.


நேட்டோவின் வான் தாக்குதலை உறுதிப்படுத்திய காவல்துறையினர் உள்ளூர் போராளித் தளபதி முகமது அலாம் என்பரும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தனர்.


மூலம்[தொகு]