உள்ளடக்கத்துக்குச் செல்

போக்லாந்து தீவு மக்கள் பிரித்தானியாவுடன் தொடர்ந்து இணைந்திருக்க முடிவு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், மார்ச்சு 12, 2013

போக்லாந்து தீவு மக்கள் ஐக்கிய இராச்சியத்தின் நிருவாகத்தின் கீழ் தொடர்ந்திருப்பதற்குப் மிகப் பெரும்பான்மையாக வாக்களித்துள்ளார்கள்.


போக்லாந்து தீவுகள்

இரண்டு நாட்கள் இடம்பெற்ற இப்பொது வாக்கெடுப்பில் 1,517 பேர் வாக்களித்திருந்தனர். இது மொத்த வாக்காளர்களில் 90% ஆகும். மூவர் மட்டுமே எதிர்த்து வாக்களித்திருந்தனர். மொத்த மக்கள் தொகை 2,900 ஆகும். ஆர்ஜெண்டீனா இத்தீவுகளுக்கு உரிமை கோரியதை அடுத்தே இக்கருத்துக் கணிப்பு இடம்பெற்றது. 31 ஆண்டுகளுக்கு முன்னர் போக்லாந்து தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே போர் இடம்பெற்றது.


தேர்தல் முடிவுகளை வரவேற்றுள்ள பிரித்தானிய அரசு, அனைத்து நாடுகளும் போக்லாந்து மக்களின் முடிவை அங்கீகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது. "போக்லாந்து தீவுகள் ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டுப் பிராந்தியமாக உள்ள தற்போதைய அரசியல் நிலை நீடிக்க வேண்டுமா?" என இப்பொது வாக்கெடுப்பின் போது மக்களிடம் கேட்கப்பட்டது.


இவ்விடயத்தில் கருத்துத் தெரிவித்த ஆர்ஜெண்டீனிய அரசுத்தலைவர் கிறித்தீனா பெர்னாண்டசு, பிராந்தியப் பிரச்சினையே இங்கு முக்கியத்துவம் பெறுகிறது, மக்கள் விருப்பமல்ல எனக் கூறினார்.


1982 ஏப்ரல் 2 ஆம் நாள் ஆர்ஜெண்டீனியப் படையினர் போக்லாந்து தீவுகளை முற்றுகையிட்டனர். இதனை அடுத்து பிரித்தானியாவின் ரோயல் கடற்படையினருடன் இரண்டு மாதங்கள் வரையில் இடம்பெற்ற சண்டையில் அர்ஜ்னெடீனா இறுதியில் சரணடைந்தது. பிரித்தானியா போக்லாந்து தீவுகளை மட்டுமல்லாது, தெற்கு ஜோர்ஜியா உட்பட ஏனைய தெற்கு அத்திலாந்திக் பிராந்தியங்களையும் கைப்பற்றியது. இச்சண்டையில் 255 பிரித்தானியப் படையினரும், 650 ஆர்ஜெண்டீனியப் படையினரும் கொல்லப்பட்டனர். மூன்று பொதுமக்களும் கொல்லப்பட்டனர்.


1767 ஆம் ஆண்டில் எசுப்பானிய இராச்சியத்திடம் இருந்து போக்லாந்து தீவுகளைப் பெற்றதாகவும், 1833 ஆம் ஆண்டில் பிரித்தானியா இத்தீவுகளைக் கைப்பற்றியதாகவும் ஆர்ஜெண்டீனா கூறி வருகிறது. ஆனாலும், இத்தீவுகளில் தமது குடியேற்றம் முன்னரே ஆரம்பித்து விட்டதாகவும், அதனை விட்டுத்தர முடியாது எனவும் பிரித்தானியா கூறுகிறது. தொடர்ந்து தமது குடியேற்றம் இடம்பெற்று வந்ததாகவும், 1833 முதல் தாம் இதனை நிருவகித்து வருவதாகவும் பிரித்தானியா கூறுகிறது.


மூலம்

[தொகு]