மாலியில் பிடிக்கப்பட்ட பிரெஞ்சுப் பணயக் கைதியைத் தாம் கொன்றுவிட்டதாக அல்-கைதா அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், மார்ச்சு 20, 2013

2011 ஆம் ஆண்டில் மாலியில் வைத்துத் தாம் கைப்பற்றிய பிரெஞ்சுத் தொழிலதிபர் ஒருவரைத் தாம் கொன்றுவிட்டதாக அல்-கைதாவின் வட்டக்கு ஆப்பிரிக்கக் கிளை அறிவித்துள்ளது.


மாலியின் பிரெஞ்சுப் படையினரின் ஊடுருவலை எதிர்த்தே தாம் பிலிப்ப் வேர்டன் எனபவரைக் கொன்றதாக அல்-கைதாவின் இசுலாமிய மாகிரெப் (ஆக்கிம்) என்ற இயக்கம் கூறியுள்ளது.


பிலிப் வேர்டனும், செர்கே லசாரவிச் என்னும் வேறொரு பிரான்சிய நாட்டவரும் தொழில் முறைப் பயணமாக மாலிக்குச் சென்ற போது 2011 நவம்பரில் அவர்களது விடுதியில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்டனர். ஆக்கிம் என்ற இயக்கம் தாமே இவர்களைக் கடத்தியதாகக் கூறி அவர்களது புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தது.


ஆப்பிரிக்காவில் மட்டும் மொத்தம் 14 பிரான்சிய நாட்டவர்கள் தீவிரவாதிகளால் பணயக் கைதிகளாகப் பிடிபட்டுள்ளனர். இவர்களில் ஆறு பேர் மாலியில் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.


பிரான்சு தற்போது வடக்கு மாலியில் தனது 4,000 படையினரை இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தியுள்ளது. இதனை அடுத்து வடக்கு மாலியின் பெரும்பாலான பகுதிகளை அது இசுலாமியத் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்டுள்ளது. ஆனாலும், பாலைவன மலைப்பகுதிகளில் இப்போது சண்டை இடம்பெற்று வருகிறது.


அடுத்த மாதம் பிரான்சு தனது படைகளை மாலியில் இருந்து திரும்ப அழைத்துக் கொள்ளத் தீர்மானித்துள்ளது. சூலை மாதம் இடம்பெறவிருக்கும் தேர்தல்கள் வரை மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் அமைதிப் படையினர் அங்கு நிலைகொண்டிருப்பர் எனத் தெரிவிக்கப்படுகிறது.


மூலம்[தொகு]