மலேசியப் பொதுத் தேர்தல் 2013: தேசிய முன்னணி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது
- மலேசியப் பொதுத் தேர்தல் 2013: தேசிய முன்னணி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது
- மலேசியத் தேர்தல் 2013: இரு பெரும் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி
- மலேசியாவுக்குள் ஊடுருவ முனைந்த 35 சூலு போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்
- மே 5 இல் மலேசியப் பொதுத் தேர்தல், தேர்தல் ஆணையம் அறிவிப்பு
- மலேசிய நாடாளுமன்றத்தை பிரதமர் நஜீப் ரசாக் கலைத்தார், விரைவில் தேர்தல்
திங்கள், மே 6, 2013
மலேசியாவில் நேற்று நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் பிரதமர் நஜீப் ரசாக் தலைமையிலான ஆளும் தேசிய முன்னணி கூட்டணி 133 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டது. மொத்தமுள்ள 222 இடங்களில் எதிர்க்கட்சிக் கூட்டணி பாக்காத்தான் ராக்யாட் 89 இடங்களைக் கைப்பற்றியது.
மலேசியா விடுதலை பெற்ற நாளில் இருந்து 55 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் தேசிய முன்னணி இம்முறையே மிகக்குறைந்த பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது தடவையாக இக்கூட்டணி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறத் தவறியுள்ளது. மலேசிய சீனர்கள் பலர் இம்முறை எதிர்க்கட்சிக்கு வாக்களித்துள்ளது குறித்து பிரதமர் நஜீப் கவலை தெரிவித்துள்ளார். மக்கள் அனைவரும் ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தேர்தலில் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் முறைகேடுகள் குறித்து தகுந்த விசாரணைகள் இடம்பெற வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். இது குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று புதன்கிழமை அன்று இடம்பெறும் என அவர் கூறினார்.
நஜீப் ரசாக் இன்று மாலை மன்னர் முன்னிலையில் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
வாக்களிப்பு நேற்று பெரும்பாலும் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இம்முறை தேர்தலில் 80 விழுக்காட்டினர் (12,992,661 வாக்காளர்கள்) வாக்களித்துள்ளனர் என மலேசியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 222 நாடாளுமன்றத் தொகுதிகள், மற்றும் 505 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 1,900 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். சுயேட்சையாக போட்டியிட்டவர்கள் பலர் வைப்புத்தொகையை இழந்துள்ளனர்.
மலேசிய இந்திய காங்கிரசு (மஇகா) தலைவர் ஜி. பழனிவேல் 462 வாக்குகள் வித்தியாசத்தில் சனநாயக செயல் கட்சியைச் சேர்ந்த மனோகரனைக் கேமரன்மலைத் தொகுதியில் தோற்கடித்துள்ளார். ஜோகூரின் சிகாமட் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட மஇகா துணைத் தலைவர் எஸ். சுப்பிரமணியம் தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட பிகேஆர் கட்சியின் சுவா ஜுயி மெங்கைக் காட்டிலும் 1,217 வாக்குகள் அதிகமாகப் பெற்று வெற்றி பெற்றார். மக்கள் கூட்டணித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான அன்வார் இப்ராகிம் பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
பினாங்கு, சிலாங்கூர், கிளந்தான் ஆகிய மாநிலங்களில் எதிர்க்கட்சிக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. சரவாக், ஜோகூர் ஆகிய மாநிலங்களைத் தேசிய முன்னணி தக்க வைத்துக் கொண்டுள்ளது. அது அந்த மாநிலத்தில் 25 நாடாளுமன்றத் தொகுதிகளில் வென்றது. ஜனநாயக செயல் கட்சி 5 இடங்களிலும் கெஅடிலான் ஓர் இடத்திலும் வென்றது.
மூலம்
[தொகு]- Malaysia PM Najib Razak in reconciliation call after poll win, பிபிசி, மே 6, 2013
- Malaysian regime retains 56-year hold on power, டெய்லி டைம்சு, மே 6, 2013
- 2013 மலேசிய பொதுத் தேர்தல் - மீண்டும் ஆட்சியை பிடித்தது தேசிய முன்னணி, தமிழ்முரசு, மே 6, 2013