உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசிய நாடாளுமன்றத்தை பிரதமர் நஜீப் ரசாக் கலைத்தார், விரைவில் தேர்தல்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், ஏப்பிரல் 3, 2013

இம்மாத இறுதியில் பொதுத்தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், மலேசியப் பிரதமர் நஜீப் துன் ரசாக் நாடாளுமன்றத்தை இன்று கலைத்தார். இதற்கான அறிவித்தலை நஜீப் தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார்.


நஜிப் ரசாக்கின் தேசிய முன்னணி கூட்டணி கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வருகிறது. இம்முறை எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் இவருக்கு பலத்த போட்டியாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2008 தேர்தல்களில் தேசிய முன்னணி முதற் தடவையாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்தது. ஐந்து மாநில சட்டசபைகளில் ஆட்சியை இழந்தது.


தேர்தல் திகதியை நிர்ணயிக்க தேர்தல் அதிகாரிகள் இன்னும் சில நாட்களில் கூடி முடிவு செய்வர். இம்மாத இறுதியில் தேர்தல்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மலேசியா விடுதலை அடைந்த நாளில் இருந்து தேசிய முன்னணி அந்நாட்டு அரசியலில் முன்னணியில் இருந்து வந்துள்ளது. மலேசியாவின் பலமான பொருளாதார வளர்ச்சியே தேசிய முன்னணியின் இம்முறை முக்கிய தேர்தல் பிரசாரங்களில் முக்கிய இடம் வகிக்கும்.


அன்வார் இப்ராகிமின் பாக்காத்தான் ராக்யாட் என்ற எதிர்க்கட்சிக் கூட்டணியில் அவரது மக்கள் நீதிக் கட்சி, மலேசிய இஸ்லாமிய கட்சி, சனநாயக செயல் கட்சி ஆகியன உறுப்புகளாக உள்ளன. ஆளும் கட்சி ஊழல், மற்றும் இனவாதம் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.


அன்வார் முன்னர் தேசிய முன்னணி அரசில் பிரத்ப் பிரதமராகப் பதவியில் இருந்தார். பின்னர் முன்னாள் பிரதமர் மகதிர் முகம்மதுவுடனான சர்ச்சையை அடுத்து 1998 ஆம் ஆண்டில் கட்சியில் இருந்து விலகினார். 1999 இல் மகாதீரின் ஆட்சிக் காலத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு ஆறு ஆண்டுகள் சிறைப்படுத்தப்பட்டார். 2000 ஆம் ஆண்டில் தன்னினச் சேர்க்கையாளர் எனக் குற்றம் சாட்டப்பட்டு மேலும் 9 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டது. எனினும் 2004 ஆம் ஆண்டில் மலேசிய மேல் நீதிமன்றம் இரண்டாவது குற்றச்சாட்டுக்களில் இருந்தும் அவரைக் குற்றமற்றவர் என விடுவித்தது. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். பின்னர் 2008 ஆம் ஆண்டில் இதே குற்றச்சாட்டுக்காக மீண்டும் கைது செய்யப்பட்டு சென்ற ஆண்டு விடுவிக்கப்பட்டார். அரசியல் காரணங்களுக்காகவே தம்மீது குற்றம் சுமத்தப்பட்டதாக அன்வார் இப்ராகிம் தெரிவித்து வந்தார்.


மூலம்

[தொகு]