வட மாகாணசபைத் தேர்தல் 2013: முன்னாள் நீதியரசர் விக்கினேசுவரன் ததேகூ முதலமைச்சர் வேட்பாளர்

விக்கிசெய்தி இலிருந்து
யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து ஏனைய செய்திகள்
இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் அமைவிடம்

யாழ்ப்பாண மாவட்டத்தின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

திங்கள், சூலை 15, 2013

எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் நீதியரசர் சி. வி. விக்னேசுவரன் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இன்று தெரிவித்தார்.


பம்பலப்பிட்டியிலுள்ள கூட்டமைப்பின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற சிறப்புக் கூட்டத்தில் இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.


கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக அக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா மற்றும் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் ஆகிய இருவரது பெயர்களும் முன்வைக்கப்பட்டன. முதலமைச்சர் வேட்பாளரை தெரிவு செய்வதில் கூட்டமைப்பு கட்சிகளுக்கு இடையில் இழுபறி நிலைமை கடந்த ஓரிரு வாரங்களாக நீடித்து வந்தது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அழுத்தங்களை சமாளிக்கும் பொருட்டு, முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனை கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழ்வின் செய்தி வெளியிட்டுள்ளது.


இதற்கிடையில், முன்னாள் நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரனை கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இன்று திங்கட்கிழமை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளனர். யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், ஹென்றி மகேந்திரன், என். சிறிகாந்தா மற்றும் க.சர்வேஸ்வரன் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.


மூலம்[தொகு]