களவாடப்பட்ட பிக்காசோ, மொனேயின் ஓவியங்கள் உருமேனியாவில் எரிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சூலை 18, 2013

நெதர்லாந்தின் அருங்காட்சியகம் ஒன்றில் இருந்து கடந்த ஆண்டு அக்டோபரில் களவாடப்பட்ட பெறுமதி வாய்ந்த ஓவியங்கள் உருமேனியாவில் எரிக்கப்பட்டுள்ளதை அந்நாட்டுப் புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். ஓவியங்களைத் திருடியதாகச் சந்தேகிக்கப்படும் நபரின் தாயாரே தனது வீட்டு அடுப்பில் இவற்றை எரித்துள்ளார்.


ரொட்டர்டாம் குன்ஸ்தால் அருங்காட்சியகத்தில் இருந்து களவாடப்பட்ட ஓவியங்களில் புகழ்பெற்ற ஓவியர்களான பிக்காசோ, கிளாடு மோனே, மற்றும் என்றி மாட்டீசு ஆகியோரின் ஆக்கங்களும் அடங்கும். இவற்றின் பெறுமதி 100 முதல் 200 மில்லியன் யூரோக்கள் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இத்திருட்டுத் தொடர்பாக ஆறு உருமேனியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிரான வழக்குகள் அடுத்த மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.


களவு தொடர்பாக தனது மகன் கைது செய்யப்பட்டதை அடுத்து, தடயங்களை அழிப்பதற்காக இவற்றை எரித்ததாக ஒல்கா தொகாரு ஒப்புக்கொண்டுள்ளார். இது உண்மை என நிரூபிக்கப்பட்டால், இது "மனித இனத்திற்கெதிராக நடத்தப்பட்ட மாபெரும் குற்றம்" என உருமேனியாவின் தேசிய வரலாற்று அருங்காட்சியகப் பணிப்பாளர் செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.


1991 ஆம் ஆண்டில் ஆம்ஸ்டர்டாம் வான் கோ அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்ட 20 ஓவியங்களுக்குப் பின்னர் இதுவே அந்நாட்டில் இடம்பெற்ற மிகப்பெரிய ஓவியத் திருட்டுச் செயலாகக் கருதப்படுகிறது.


மூலம்[தொகு]