உள்ளடக்கத்துக்குச் செல்

ரோமா மக்களை வெளியேற்றுவதற்கு பிரான்சு மீது ஐரோப்பிய ஒன்றியம் சட்ட நடவடிக்கை

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், செப்டம்பர் 15, 2010

நூற்றுக்கணக்கான ரோமா மக்களை (ஜிப்சிகள்) பிரான்சு தனது நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதித்துறை ஆணையாளர் விவியன் ரெடிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


விவியென் ரெடிங், ஐரோப்பிய ஒன்றிய நீதித்துறை ஆணையாளர்

கடந்த மாதத்தில் இடம்பெற்ற நாடு கடத்தல்கள் "பெரும் இழுக்கு” என அவர் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். "இப்படியான ஒரு முக்கிய நடவடிக்கை ஒரு சிறிய குற்றம் இல்லை."


"இந்த ஆணையத்தில் 11 ஆண்டுகள் அனுபவம் உள்ள ஒருவர் என்ற முறையில் நான் சொல்கிறேன். இன வாரியாக ஒருவரைp பாகுபாடு காட்டுவதென்பது ஐரோப்பாவில் இடம்பெற முடியாது," என அவர் கூறினார்.


”பிரான்சுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை,” என ரெடிங் தெரிவித்தார்.


இக்குற்றச்சாடுக்களை மறுத்துள்ள பிரான்சு, தாம் ரோமா சிறுபான்மையினத்தவரை இலக்கு வைக்கவில்லை எனவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறைகளுக்கு ஒப்பவே நாம் அவர்களி வெளியேற்றினோம் எனத் தெரிவித்துள்ளது.


சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் இப்பிரச்சினை ஐரோப்பிய நீதிமன்றத்தின் முன்னால் கொண்டு செல்லப்பட்டு பிரான்சு மீது அபராதம் விதிக்கப்படலாம்.


பிரான்ஸ் கடந்த ஆகத்து மாதத்தில் சுமார் ஆயிரம் ரோமா மக்களை ருமேனியாவுக்கும் பல்கேரியாவுக்கும் நாடு கடத்தியதை அடுத்து உலக நாடுகள் பல அதற்கு பலத்த கண்டனங்களைத் தெரிவித்தன.


கடந்த சூலை மாதம் பிரான்சு நாட்டின் வடமேற்கிலுள்ள லுவார் பள்ளத்தாக்கில் ஓர் ரோமானி இளைஞர் பிரான்சு நாட்டுக் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கலகம் வெடித்தது. இப்பின்னணியில் பிரான்சு நாட்டு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. அனுமதியின்றி உருவான 300க்கும் அதிகமான உரோமானி கூடாரங்களும் குடியிருப்புகளும் அகற்றப்பட வேண்டும் என்று அமைச்சரவை முடிவுசெய்தது. உரோமானி கூடாரங்களில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாகவும், குழந்தைகள் பிச்சையெடுக்கும் இழிநிலைக்குத் தள்ளப்படுவதாகவும், சட்டமீறல் நிகழ்வதாகவும் அரசு குற்றம் சாட்டியது. பிரான்சு நாட்டின் பாதுகாப்புக் கருதி, அனுமதியின்றி அல்லது வேலையின்றி வாழும் உரோமானி மக்களை மூன்று மாதங்களுக்குள் வெளியேற்ற அரசு துணிந்தது.


இவ்வாண்டு ஆரம்பத்தில் இருந்து 8,000 ரோமா மக்கள் பிரான்சில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 2009 இல் 9,875 பேர் நாடு கடத்தப்பட்டனர்.

தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]