உள்ளடக்கத்துக்குச் செல்

படகு அகதிகள் ஆத்திரேலியாவில் இனித் தஞ்சம் கோர முடியாது, கெவின் ரட் திடீர் அறிவிப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சூலை 19, 2013

தகுந்த நுழைவாணை இல்லாமல் இன்று முதல் படகுகளில் ஆத்திரேலியக் கடற்பரப்பினுள் நுழையும் அகதிகள் ஆத்திரேலியாவில் இனிமேல் அகதிகளாகக் குடியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனப் பிரதமர் கெவின் ரட் அறிவித்துள்ளார்.


கெவின் ரட்

பப்புவா நியூ கினி பிரதமர் பீட்டர் ஓ’நீலுடன் இன்று பிறிஸ்பேன் நகரில் செய்துகொள்ளப்பட்ட உடன்பாடு ஒன்றை அடுத்தே பிரதமர் ரட் இவ்வாறு அறிவித்துள்ளார். மக்களைக் கடத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளோருடன் இப்புதிய ஒப்பந்தத்தின் படி தாம் புதிய போர் ஒன்றைத் தொடுத்துள்ளதாக அவர் கூறினார்.


பப்புவா நியூ கினியுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்பாட்டின் படி, சட்டவிரோதமாக ஆத்திரேலியக் கடற்பரப்பினுள் நுழையும் அனைவரும் பப்புவா நியூ கினிக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்து அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். அந்நாட்டு அதிகாரிகளே அகதி விண்ணப்பங்களைப் பரிசீலிப்பர். உண்மையான அகதிகள் எனக் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் அவர்கள் பப்புவா நியூ கினியிலேயே குடியேற அனுமதிக்கப்படுவார்கள். ஏனையோர் அவர்களது சொந்த நாடுகளுக்கோ அல்லது வேறொரு நாட்டுக்கோ திருப்பி அனுப்பப்படுவார்கள்.


"இத்தீர்மானம் மிகக் கடுமையானது என்பதை நான் அறிவேன்," என கெவின் ரட் கூறினார். ஆனாலும், இது தேவையானதொரு தீர்மானம் என அவர் கூறினார். பப்புவா நியூ கினிக்கு அனுப்பப்படுபவர்களின் எண்ணிக்கையின் அதிக பட்ச அளவில் எந்தக் கட்டுப்பாடும் இராது என அவர் கூறினார்.


"இன்று முதல் நுழைவாணை இல்லாமல் படகில் வருபவர்கள் எவரும் ஆத்திரேலியாவில் என்றுமே குடியேற முடியாது"

—பிரதமர் கெவின் ரட்

ஆனாலும், கெவின் ரட் அவர்களின் இந்த மாற்றங்களை சட்டபூர்வமாக அணுகுவது குறித்து அகதிகளுக்கான வழக்கறிஞர்கள் ஆலோசித்து வருகின்றனர்.


ஆத்திரேலியாவின் எதிர்க்கட்சித் தலைவர் டோனி அபொட் "இத்தீர்மானத்தை நான் வரவேற்கிறேன், ஆனால், இத்திட்டம் கெவின் ரட்டின் தலைமையிலான அரசினால் செயற்படுத்த முடியாது," என்றார்.


ஆத்திரேலியப் பசுமைக் கட்சியின் தலைவர் கிறிஸ்ட்டின் மில்னி, அரசியல் நெருக்கடியினால் தஞ்சம் கோர வருபவர்களை வறுமையான நாடு ஒன்றுக்கு அனுப்பும் திட்டத்தைக் கண்டித்துக் கருத்து வெளியிட்டுள்ளார். பப்புவா நியூ கினி ஏற்கனவே ஊழல், வன்முறைகள், மற்றும் மலேரியா தொற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான அகதிகளை ஏற்றுக் கொள்ளும் நிலையில் அந்நாட்டின் நிலைமை இல்லை என அவர் கூறினார்.


மூலம்

[தொகு]