மாலியின் துவாரெக் போராளிகள் அமைதிப் பேச்சுக்களில் இருந்து விலகுவதாக அறிவிப்பு
- 14 திசம்பர் 2013: மாலியில் துவாரெக் போராளிகளின் தாக்குதலில் இரண்டு அமைதிப்படையினர் கொல்லப்பட்டனர்
- 2 திசம்பர் 2013: மாலியில் துவாரெக் போராளிகள் போர் நிறுத்தத்தை முடித்துக் கொண்டனர்
- 3 நவம்பர் 2013: மாலியில் இரண்டு பிரெஞ்சு செய்தியாளர்கள் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர்
- 27 செப்டெம்பர் 2013: மாலியின் துவாரெக் போராளிகள் அமைதிப் பேச்சுக்களில் இருந்து விலகுவதாக அறிவிப்பு
- 19 சூன் 2013: துவாரெக் போராளிக் குழுவுடன் மாலி அரசு அமைதி உடன்பாடு
வெள்ளி, செப்டெம்பர் 27, 2013
கடந்த சூன் மாதத்தில் மாலி அரசுடன் செய்துகொள்ளப்பட்ட அமைதி உடன்பாட்டில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக துவாரெக் போராளிகள் அறிவித்துள்ளனர். அமைதி உடன்பாட்டை மாலி அரசு மதிக்கவில்லை என போராளிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
துவாரெக் இனத்தைச் சேர்ந்த மூன்று குழுக்கள் அயல் நாடான புர்க்கினா பாசோவில் கூடிப் பேசியதை அடுத்து இந்த விலகல் குறித்து அறிவித்தார்கள். அத்துடன் அமைதிப் பேச்சுக்களில் ஈடுபட்ட அனைத்துத் தரப்பினரையும் அவசரக் கூட்டத்திற்கு வருமாறு அவர்கள் அழைப்பு விடுத்தனர்.
அமைதிப் பேச்சுக்கள் மூலம் தேசிய அளவில் தேர்தல்கள் இடம்பெற்றன. அதே வேளையில், உடன்பாட்டின் படி தெற்கு நகரான கிடாலினுள் இராணுவத்தினரை நுழைய போராளிகள் இணங்கினர்.
"அமைதி உடன்பாட்டில் எட்டப்பட்ட எந்த ஒரு தீர்மானமும் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை," என அசவாத் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரான மொசா அக் அச்சரத்தோமனே என்பவர் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடன்பாட்டின் படி, சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் துவாரெக் பிரிவினைவாதிகள் எவரும் இன்னும் விடுவிக்கப்படவில்லை என என அவர் கூறினார்.
மூலம்
[தொகு]- Mali Tuareg separatist rebels pull out of peace deal, பிபிசி, செப்டம்பர் 26, 2013
- Mali Tuareg separatists suspend participation in peace process, ராய்ட்டர்ஸ், செப்டெம்பெர் 26, 2013