பொதுநலவாய அமைப்பில் இருந்து விலகுவதாக காம்பியா அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், அக்டோபர் 3, 2013

பொதுநலவாய நாடுகளின் அமைப்பில் இருந்து விலகுவதாக மேற்காப்பிரிக்க நாடான காம்பியா அறிவித்துள்ளது.


ஐக்கிய இராச்சியம் உட்பட 54-நாடுகள் கூட்டமைப்பு ஒரு புதுக்குடியேற்றப்போக்குள்ள அமைப்பு என காம்பியா வர்ணித்துள்ளது. பொதுநலவாயத்தில் இருந்து விலகுவதாக காம்பியாவின் அரசுத் தொலைக்காட்சி அறிவித்துள்ள போதும், விலகுவதற்கான வேறு எந்தக் காரணத்தையும் அது கூறவில்லை.


காம்பியா பொதுநலவாயத்தில் இருந்து விலகுவது தமக்கு மிகுந்த கவலையைத் தருகிறது என பிரித்தானியா கூறியுள்ளது. தேர்தல்களின் போது எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக ஐக்கிய இராச்சியம் செயல்பட்டதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அரசுத்தலைவர் யாகியா ஜாமி பிரித்தானியாவைக் குற்றம் சாட்டியிருந்தார்.


1994 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து இளம் இராணுவ வீரராக இருந்த யாகியா ஜாமி ஆட்சியைக் கைப்பற்றினார். அதன் பின்னர் அவர் அடுத்தடுத்து இடம்பெற்ற நான்கு சர்ச்சைக்குரிய பல-கட்சித் தேர்தல்களில் வெற்றி பெற்றார். யாகியா ஜாமியின் மனித உரிமை மீறல்கள், குறிப்பாக ஊடக சுதந்திரம் பல பன்னாட்டு அமைப்புகளால் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருந்தன.


கடந்த ஆண்டு ஆகத்து மாதத்தில் மரணதண்டனையை எதிர்நோக்கியிருந்த ஒன்பது கைதிகள் எவ்வித முன்னறிவித்தலும் இன்றி சுட்டுக் கொல்லப்பட்டு மரணதண்டனைக்குள்ளாகியிருந்தனர். இது பன்னாட்டு மன்னிப்பகம் உட்படப் பல நாடுகளின் கண்டனத்திற்குள்ளானது.


கடைசியாக 2003 ஆம் ஆண்டில் சிம்பாப்வே நாடு பொதுநலவாயத்தில் இருந்து விலகியது. 2009 இல் ருவாண்டாவும், 1995 இல் கமரூன், மொசாம்பிக் நாடுகளும் பொதுநலவாயத்தில் இணைந்து கொண்டன. பொதுநலவாய அமைப்புகளின் தலைவர்களின் உச்சி மாநாடு அடுத்த மாதம் இலங்கையின் தலைநகர் கொழும்பில் நடைபெறவுள்ளது.


மூலம்[தொகு]