உள்ளடக்கத்துக்குச் செல்

இத்தாலியில் ஆப்பிரிக்க அகதிகளை ஏற்றி வந்த படகு மூழ்கியதில் 300 பேர் வரை உயிரிழப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, அக்டோபர் 4, 2013

ஆப்பிரிக்காவில் இருந்து குடியேறிகளை ஏற்றி வந்த படகொன்று நேற்று வியாழன் அன்று இத்தாலியின் தெற்குக் கரையில் விபத்துக்குள்ளாகி மூழ்கியதில் குறைந்தது 300 பேர் வரையில் உயிரிழந்தனர்.


இத்தாலியின் தெற்கே லாம்பதூசா தீவில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் சுமார் 500 பேரை ஏற்றி வந்த இந்த மீன்பிடிப் படகு தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளாகியது. இது வரையில் 111 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 155 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட உடல்களில் அரைவாசிக்கும் அதிகமானோர் பெண்களும், நான்கு சிறுவர்களும் அடங்குவர். மூழ்கிய படகில் பலரின் உடல்கள் இன்னும் இருக்கலாம் என நம்பப்படுகிறது.


படகில் வந்தோர் பெரும்பாலானோர் எரித்திரியா, மற்றும் சோமாலியாவைச் சேர்ந்தவர்கள் என ஐக்கிய நாடுகளின் மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர்.


இறந்தவர்களை நினைவு கூரும் முகமாக இத்தாலியப் பாடசாலைகளில் இன்று காலையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன.


துனீசியாவைச் சேர்ந்த படகு ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். இப்படகு லிபியாவின் மிஸ்ராட்டா நகரில் புறப்பட்டதாகவும், இது லாம்பெதூசா தீவை அண்மித்த போது இயந்திரம் பழுதடைந்து இயங்க மறுத்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. படகில் இருந்த சிலர் அவ்வழியால் வரும் கப்பல்களை உதவிக்கு அழைப்பதற்காக துணி ஒன்றுக்குத் தீவைத்ததாகவும், அது படகின் ஏனைய பகுதிகளுக்கும் பரவியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இவ்வார ஆரம்பத்தில் இத்தாலியின் சிசிலியில் படகொன்று மூழ்கியதில் 13 குடியேறிகள் கொல்லப்பட்டனர். இவ்வாண்டு செப்டம்பர் 30 வரை இத்தாலிக்கு 30,100 குடியேறிகள் கடல் மார்க்கமாக வந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ளது. எரித்திரியாவில் இருந்து ஒவ்வொரு மாதமும் 3,000 பேர் வரையில் வெளியேறுகின்றனர். 10,000 பேர் வரையில் அங்குள்ள சிறைகளில் அரசியல் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர்.


மூலம்

[தொகு]