உள்ளடக்கத்துக்குச் செல்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட ஏழு வெளிநாட்டவர்களும் கொல்லப்பட்டு விட்டதாக போராளிகள் அறிவிப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், மார்ச்சு 11, 2013

கடந்த மாதம் கடத்தப்பட்ட ஏழு வெளிநாட்டவரும் கொல்லப்பட்டு விட்டதாக நைஜீரியாவில் இசுலாமியப் போராளிக் குழு ஒன்று அறிவித்துள்ளது.


நைஜீரியாவின் பவுச்சி மாநிலத்தில் கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த இத்தாலி, பிரித்தானியா, கிரீசு, மற்றும் லெபனான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களே கடத்தப்பட்டவர்களாவர். அன்சாரு என்ற இசுலாமியப் போராளிக் குழு தாமே இவர்களைக் கொன்றதாக இணையத்தில் வெளியிடப்பட்டிருந்த அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்களின் இறந்த உடல்களின் படங்களையும் வெளியிட்டுள்ளது. நைஜீரியாவில் பிரபலமான போக்கோ ஹராம் என்ற இசுலாமியக் குழுவைச் சேர்ந்த ஒரு துணைக் குழுவே இந்த அன்சாரு என நம்பப்படுகிறது.


படையினர் தம் மீது தாக்குதல் மேற்கொண்டதை அடுத்தே தாம் இவர்களைக் கொன்றதாக அன்சாரு இயக்கம் அறிவித்துள்ளது. ஆனால் இதனைப் பிரித்தானியா மறுத்துள்ளது. நைஜீரியாவின் தலைநகர் அபுஜாவில் அண்மையில் நடமாடிய போர் விமானங்கள் மாலியில் இடம்பெற்றுவரும் பிரெஞ்சுப் படையினரின் இராணுவ நடவடிக்கைகளுக்காக படையினரை ஏற்றிச் சென்றன என்றும், நைஜீரியாவில் தாக்குதல் நடத்தவல்ல எனவும் பிரித்தானியா கூறியுள்ளது.


கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஐக்கிய இராச்சியத்தின் வெளியுறவுத்துறை செயலர் வில்லியம் ஹேக் கருத்துத் தெரிவிக்கையில், பிரெண்டன் வோன் என்ற பிரித்தானிய கட்டடத் தொழிலாளர் "வேறு ஆறு வெளிநாட்டவர்களுடன் சேர்த்து அவர்களைக் கடத்தியவர்களால் அனேகமாகக் கொல்லப்பட்டு விட்டார்கள்" எனத் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "இது ஒரு மன்னிக்க முடியாத கொலைகள், இவற்றுக்கு எவ்விதத்திலும் நியாயம் கூற முடியாது," எனக் கூறினார்.


அன்சாரு இயக்கம் 2012 சனவரியில் ஆரம்பிக்கப்பட்டது. பிரித்தானிய அரசு இக்குழுவைத் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்துள்ளது.


மூலம்

[தொகு]