மல்தோவாவில் அரசுக்கு எதிராக கம்யூனிஸ்டுகள் ஆர்ப்பாட்டம்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, அக்டோபர் 6, 2013

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான மல்தோவாவில் நாட்டில் ஆட்சியில் இருக்கும் ஐரோப்பிய-ஆதரவு அரசைப் பதவி விலகக் கோரி அங்குள்ள கம்யூனிஸ்டுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை பெரும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். மல்தோவா உருசியாவுடன் தொடர்புகளைப் பேண வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.


3.5 மில்லிஒயன் மக்கள்தொகையைக் கொண்ட ஐரோப்பாவில் வறுமையான நாடுகளில் ஒன்றான மல்தோவாவின் அனைத்துப் பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கானோர் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.


மல்தோவா அரசு தமது நாட்டில் சுதந்திர வர்த்தக வலயம் ஒன்றை ஏற்படுத்த ஐரோப்பிய ஒன்றியத்துடன் அடுத்த மாதம் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடவுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே கம்யூனிஸ்டுகள் போராடி வருகின்றனர். அத்துடன் நாட்டில் பெருகி வரும் ஊழல், குற்றங்கள், மற்றும் நீதித்துறை, ஊடகத்துரை மீதான அழுத்தங்கள், அதிகரித்து வரும் வேலையின்மை போன்றவையும் போராட்டத்திற்கான காரணம் ஆகும்.


“மல்தோவியர்கள் தற்போது போர்க்காலத்தை விட அதிகமான அளவு வறுமையில் வாடுகிறார்கள். பள்ளிக்கூடங்கள் அழிக்கப்படுகின்றன, வங்கிகள் சூறையாடப்படுகின்றன," என தலைநகர் சிசினோவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஆர்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.


மல்தோவாவில் உற்பத்தி செய்யப்படும் திராட்சைமது, மற்றும் மதுசாரங்கள் மீது உருசியா தடை விதித்திருந்தது. மல்தோவா ஐரோப்பிய ஒன்றியத்துடன் கூட்டிணைவதை எதிர்ப்பதற்கே உருசியா இம்முடிவை எடுத்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் மல்தோவாவின் எந்த முடிவும் அந்நாட்டில் உள்ள உருசிய மொழிபேசும் திரான்சுனிஸ்திரியர்களுக்கு அவர்களின் விடுதலைப் பயணத்திற்கு ஊறு விளைவிக்கும் என உருசியாவின் பிரதிப் பிரதமர் திமீத்ரி ரகோசின் அண்மையில் தெரிவித்திருந்தார்.


மூலம்[தொகு]