வட மாகாண சபையின் முதல் அமர்வு கைதடியில் புதிய கட்டடத்தில் தொடங்கியது

விக்கிசெய்தி இலிருந்து
யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து ஏனைய செய்திகள்
இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் அமைவிடம்

யாழ்ப்பாண மாவட்டத்தின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

வெள்ளி, அக்டோபர் 25, 2013

இலங்கையின் வடமாகாண சபையின் முதலாவது அமர்வு இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் கைதடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் துவங்கியது.


வடக்கு மாகாண சபைக்கென 450 மில்லியன் ரூபா செலவில் இப்புதிய இருமாடிக் கட்டடம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் தளப் பகுதியில் இன்று காலை 08:00 மணியளவில் வைபவ ரீதியாக வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேசுவரன், வட மாகாண ஆளுநர் ஜி. ஏ. சந்திரசிறி ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். கட்டடத்தின் மாடிப்பகுதியில் தொடர்ந்தும் கட்டுமானப்பணிகள் நடந்து வருகின்றன.


இந் நிகழ்வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம். ஏ. சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், வட மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


இதனை அடுத்து காலை 9.30 மணிக்கு மாகாணசபையின் கன்னியமர்வு இடம்பெற்றது. இதன் போது யாழ் மாவட்ட மாகாண சபை உறுப்பினர் சி. வி. கே. சிவஞானம் அவைத் தலைவராக (தவிசாளர்) தெரிவு செய்யப்பட்டார். பிரதித் தலைவராக அந்தனி ஜெயநாதன் தெரிவு செய்யப்பட்டார்.


முதல் அமர்வின் போது உரையாற்றிய முதலமைச்சர் விக்னேசுவரன், "வட மாகாணத்தின் ஆளுநராக ஒரு இராணுவ அதிகாரி பணியாற்றுவதை நாம் விரும்பவில்லை, மக்களின் எதிர்பார்ப்பை புரிந்துகொண்டு செயலாற்றக்கூடிய ஒருவரே ஆளுநராக வர வேண்டும் என மக்களும் விரும்புகின்றார்கள்," எனக் குறிப்பிட்டார். "வடமாகாணத்தில் தற்போது உள்ள மக்கள் தொகை விகிதாச்சாரத்தின் அடிப்படையில் ஐந்தில் ஒன்று என்கிற எண்ணிக்கையில் இராணுவத்தினர் உள்ளனர். இவர்களைப் படிப்படியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும், இராணுவத்தினர் முகாம்களுக்குள் முடக்கப்பட வேண்டும்" எனக் கூறினார்.


வட மாகாண சபையானது மக்களுக்கான தேவைகளை பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் சட்ட வரையறைக்குள் தந்திரோபாய அடிப்படையில் முன்னகர்த்தி செல்லவுள்ளது என்றார் சி. வி. விக்னேஸ்வரன்.


இதனைத் தொடர்ந்து அவைத்தலைவர் கந்தையா சிவஞானம் தலைமையில் அவை நிகழ்வுகள் நடைபெற்றன. முதலமைச்சரின் உரையைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கந்தசாமி கமலேந்தின் (ஈ.பி.டி.பி) உரையாற்றினார். முஸ்லிம்கள் சார்பாக த.தே.கூ. உறுப்பினர் அஸ்மினும் அரசாங்கத்தின் சார்பாக ஐ.ம.சு.மு. உறுப்பினர் ஜெயதிலகவும் உரைநிகழ்த்தினர். நண்பகல் 12 மணியுடன் நிறைவுற்றது. அடுத்த அமர்வு நவம்பர் மாதம் 11ம் திகதி நடைபெறுமெனவும் தலைவர் அறிவித்தார். அன்றைய நாள் வட மாகாண ஆளுநர் ஜி. ஏ. சந்திரசிறி கொள்கைப் பிரகடனத்தை வெளியிடுவார்.


இன்றைய நிகழ்வில் முன்னதாக மருத்துவ செலவுக்காக உதவித் தொகையினைக் கோரியிருந்த 55 பேருக்கு காசோலைகள் வழங்கப்பட்டன.


கடந்த செப்டம்பர் 21ம் திகதி நடைபெற்ற வட மாகாண சபைத் தேர்தலில் த.தே. கூட்டமைப்பு 30 இடங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 7 இடங்களையும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு இடத்தையும் கைப்பற்றின.


மூலம்[தொகு]