உள்ளடக்கத்துக்குச் செல்

பிரித்தானியப் பிரதமர் கேமரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணப் பயணம்

Checked
விக்கிசெய்தி இலிருந்து
யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து ஏனைய செய்திகள்
இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் அமைவிடம்

யாழ்ப்பாண மாவட்டத்தின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

சனி, நவம்பர் 16, 2013

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமான பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவென இலங்கை வந்திருந்த பிரித்தானியப் பிரதமர் டேவிட் கேமரன் ஒரு நாள் பயணமாக நேற்று யாழ்ப்பாணத்திற்கு விமானம் மூலம் சென்றடைந்தார். இலங்கை விடுதலை பெற்ற பின்னர் உலக நாடுகள் ஒன்றின் அரசுத்தலைவர் ஒருவர் யாழ்ப்பாணம் சென்றது இதுவே முதற் தடவையாகும். இவருடன் முப்பதிற்கு மேற்பட்ட வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் சென்றனர்.


படிமம்:British Prime Minister David Cameron in Jaffna.jpg
வலி வடக்கு நலன்புரி நிலையத்தில் கேமரன்
உதயன் பத்திரிகை நிறுவனர் ஈ. சரவணபவனுடன் கேமரன்

யாழ்ப்பாணத்திற்கு சென்ற பிரதமர் டேவிட் கேமரன் முதலில் வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேசுவரனை யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் சந்தித்து சுமார் அரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். இவருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா. சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரும் பங்குபற்றினர். பேச்சுவார்த்தையின் முடிவில் ஆறு அம்சத் திட்டம் ஒன்று அடங்கிய ஆவணங்களை முதலமைச்சர் விக்னேசுவரன் பிரதமரிடம் கையளித்தார். இராணுவத்தினரை அகற்றல், சிவிலியன் ஆளுனரை நியமித்தல், 13வது திருத்தச் சர்ட்டத்தை காவல்துறை, மற்றும் காணி அதிகாரங்களுடன் அமுல்படுத்தல், இடம்பெயர்ந்தவர்களை மீள குடியமர்த்தல், கல்வி, மற்று வேலை வாய்ப்பு போன்ற பல அம்சங்கள் இதில் அடங்கியிருந்தன.


கேமரன் வட மாகாணசபை முதல்வரை சந்தித்துக் கொண்டிருந்த வேளை, நூலகத்திற்கு வெளியே காணாமல் போனோரின் உறவுகள் நூற்றுக்கணக்கில் கூடி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். ஆனாலும், நூலக நுழைவாயிலுக்கு செல்ல அவர்களை காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. அதனால் அந்தப் பகுதியில் ஒரு இழுபறி நிலை ஏற்பட்டது. இப்போராட்டத்தில் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பிரதமரின் வாகனத் தொடரணி அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற வேளையில் அதனை மறித்து, அவரிடம் புகார் செய்ய காணாமல் போனவர்களின் உறவினர்கள் முயற்சித்தார்கள். ஆனாலும், வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் சிலர் வெளியே வந்து, நிலைமைகளை அவதானித்தனர். அவர்களிடம் காணாமல் போனவர்களின் உறவினர்களால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.


இதே வேளையில், அரச ஆதரவான ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் அங்கு திடீரெனக் கூடி பதாதைகளுடன் நூலக நுழைவாயிலுக்கு முன்னாக அரசுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினர்.


பிற்பகல் 3.15 மணிக்கு யாழ்ப்பாணம் உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு வருகை தந்த கேமரன் அதன் பிரதம ஆசிரியர் கானமயில்நாதன், நிர்வாக இயக்குநர் ஈ.சரவணபவன் ஆகியோருடன் கலந்தரையாடினார். இதன்போது அண்மைக்காலத்தில் பத்திரிகைக்கு எதிராக நடாத்தப்பட்ட தாக்குதல்கள், ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டமை தொடர்பிலும் கேட்டு அறிந்து கொண்டதுடன் நேரடியாகவும் பார்வையிட்டார். அத்துடன் விசமிகளால் எரித்து நாசம் செய்யப்பட்ட அச்சு இயந்திரத்தையும் பார்வையிட்டதுடன் நிறுவன அனைத்து பணியாளர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.


அதன் பின்னர் பிரித்தானியப் பிரதமர் வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாமுக்குச் சென்று அங்குள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடினார். அம்மக்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகள் தொடர்பில் அவர் இதன்போது கேட்டறிந்து கொண்டார். இந்நிலையில் மாவிட்டபுரம்- கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்தில் அவர் கலந்து கொள்ளாமையினால் மக்கள் பெரும் ஏமாற்றமடைந்ததுடன், சில மக்கள் அழுதும் உள்ளனர். முன்னதாக வெள்ளிக்கிழமை காலை யாழ். மாவட்டத்தின் பல பாகங்களிலிருந்தும் மாவிட்டபுரம் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த மக்களுக்கு படைப்புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளதுடன், 3 வாகனங்கள் மீது கல்வீச்சு தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனாலும் சுமார் 1500ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.


மூலம்

[தொகு]