உள்ளடக்கத்துக்குச் செல்

சுவிஸ் வானியலாளருக்கு ஆர்மேனியாவின் விக்டர் அம்பார்த்சூமியான் விருது வழங்கப்பட்டது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, செப்டெம்பர் 19, 2010


சுவிட்சர்லாந்து ஜெனீவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானியலாளர் மைக்கல் மேயருக்கு முதலாவது விக்டர் அம்பார்த்சூமியான் விருது ஆர்மேனியாவின் தலைநகர் யெரிவானில் வைத்து கடந்த வியாழனன்று வழங்கப்பட்டுள்ளது.


51 பெகாசி பி என்ற புறக்கோள்

எமது சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள்களைப் (வெளிக்கோள்கள்) பற்றிய ஆய்வுக்காக இவருக்கும் இவரது ஆய்வில் கலந்து கொண்ட கரிக் இசுரேலியான், நூனோ சாண்டொசு ஆகியோருக்கும் சேர்த்து இப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.


வெளிக்கொள்கள் இருப்பதை 1995 ஆம் ஆண்டில் முதற் தடவையாகக் கண்டுபிடித்தவர் இவரே. இவர் 51 பெகாசி பி என்ற புறக்கோளைக் கண்டுபிடித்தார்.


"கடந்த 10 ஆண்டுகளாக மைக்கல் மேயரும் அவரது குழுவும் புறக்கோள்களின் இயற்பியல், மற்றும் வேதி இயல்புகளை ஆராய்ந்து அறிந்துள்ளனர். இந்த ஆய்வுகள் கோள்களின் தோற்றத்தை ஆராயும் ஆய்வுக்கு மிக முக்கியமானதாகும்," என சுவிட்சர்லாந்து அறிவியல் கழகம் தெரிவித்துள்ளது.


இப்பரிசு முதன் முதலில் 2009 ஆம் ஆண்டில் ஆர்மேனியாவின் அரசுத்தலைவர் சேர்ஸ் சார்க்சியானினால் அறிவிக்கப்பட்டது. ஆர்மேனியாவின் தலைசிறந்த இயற்பியலாளரும் வானியலாளருமான விக்டர் அம்பார்த்சூமியானின் நினைவாக இப்பரிசு வழங்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படவிருக்கும் இப்பரிசு $500,000 அமெரிக்க டாலர்கள் பெறுமதியானதாகும்.

மூலம்