காலநிலை மாற்றத்தால் வட அமெரிக்கப் பறவைகள் உருவத்தில் குறுகியுள்ளன

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், மார்ச்சு 16, 2010


வட அமெரிக்காவில் நூற்றுக்கும் அதிகமான இனங்களைச் சேர்ந்த சுமார் ஐந்து லட்சம் பறவைகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம், பல பறவையினங்கள் படிப்படியாக, அளவில் சிறுத்து குறுகிய சிறகுகளுடன் உருவத்தில் சுருங்கிவருவதாக கண்டறியப்பட்டுள்ளது.


50 ஆண்டுக்காலப்பகுதிக்குள் பறவையினங்களில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், வெப்பகாலநிலையின் விளைவால் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.


ஆனால் இந்த மாற்றம் இப்பறவைகளுக்கு பெரிதும் ஏதும் கெடுதல் விளைவிக்கும் எனக் கருத ஆதாரங்கள் சிறதளவே உள்ளன என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


சுற்றுச்சூழல் துறையுடன் தொடர்புடைய ஒய்க்கோஸ் என்ற இதழ் இவ்வாய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.


சூடான காலநிலையில் மிருகங்கள் பொதுவாக வளர்ச்சி குன்றும் என்ற பேர்க்மன் விதி என்ற பெயரில் ஒரு பொதுவான விதி உயிரியலில் சொல்லப்படுகிறது.


சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஜோசு வான் புஸ்கிரிக், பென்சில்வேனியாவைச் சேர்ந்த ராபர்ட் லெபர்மான் ஆகிய அறிவியலாளர்களும் அவர்களது குழுவும் இவ்வாய்வை மேற்கொண்டனர்.


1961 முதல் 2007 வரை கைப்பற்றப்பட்ட மொத்தம் 486,000 பறவைகளை இவர்கள் ஆய்வுக்குள்ளாக்கினர். இவை 102 பறவையினங்களைச் சேர்ந்தவையாகும்.


கரிபியன் தீவுகள், மத்திய மற்றும் தென் அமெரிக்கப் பகுதிகளில் குளிர்காலத்தில் பொதுவாக இந்த மாற்றத்தை அவதானிக்க முடிந்ததாக கூறுகின்ற ஆய்வாளர்கள், உடல் பருமனின் அளவில் ஏற்பட்ட மாற்றத்தை வட அமெரிக்க பிராந்தியத்திலேயே குறிப்பாக கூவும் பறவைகளிடத்தில் காணமுடிந்ததாக சுட்டிக்காட்டுகின்றனர்.

மூலம்[தொகு]