தமிழக சட்டசபைக்கான தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், ஏப்பிரல் 12, 2011

தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக நாளை புதன்கிழமை 13ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது. தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவுக்கு வந்தது.


இந்த தேர்தலில் திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றன. இதுதவிர பாஜக, பகுஜன் சமாஜ், இந்திய ஜனநாயக கட்சி ஆகியவையும் தனித்தனியாக போட்டியிடுகின்றன.


234 தொகுதிகளிலும் 2,773 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆளும் திமுக 119 தொகுதிகள், காங்கிரஸ் 63, பாட்டாளி மக்கள் கட்சி 30, விடுதலைச் சிறுத்தைகள் 10, கொங்கு நாடு முன்னேற்றக்கழகம் 7, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 3, மூவேந்தர் முன்னேற்றக் கழகம் மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலா 1 என்றவகையில் திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு அமைந்திருக்கிறது. அஇஅதிமுக 160 தொகுதிகளில் போட்டியிடுகிறது, அக்கூட்டணியில், தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் 41, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 12, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 10, மனிதநேய மக்கள் கட்சி 3, புதிய தமிழகம், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலா 2, இந்தியக் குடியரசுக் கட்சி மற்றும் அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக்கழகம் மற்றும் கொங்கு இளைஞர் பேரவை தலா 1 என்ற வகையில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.


தேர்தலையொட்டி கடந்த 3 வாரங்களாக அரசியல் கட்சித் தலைவர்களும் வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதி, தான் போட்டியிடும் திருவாரூரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தனது பிரச்சாரத்தை முடித்தார். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சென்னையில் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு நிறைவு செய்தார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்து அதனை நிறைவு செய்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் தான் போட்டியிடும் ரிஷிவந்தியம் தொகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை முடித்தார்.


தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்கள், இன்று மாலையே வாக்குச்சாவடிகளுக்கு சென்றுவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தலையொட்டி, மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தும் பணி இன்று நடக்கிறது. பதற்றமான இடங்களில் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக 25 ஆயிரம் துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தொகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். துணை ராணுவத்தினர், ரிசர்வ் காவல்துறை, தமிழக காவல்துறை, சிறைத்துறையினர், என்சிசி படையினர், முன்னாள் ராணுவத்தினர் என மாநிலம் முழுவதும் மொத்தம் ஒரு லட்சத்து 15 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். . வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வேட்பாளரின் பெயர், சின்னங்கள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அவை இன்று மாலை வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படும்.


வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதி நடக்கும். அன்றைய தினம் பிற்பகலுக்குள் முடிவுகள் வெளியாகிவிடும்.


மூலம்[தொகு]