இந்தியச் செயற்கைக் கோளைக் காவிச் சென்ற ராக்கெட் வானில் வெடித்துச் சிதறியது
- 8 பெப்பிரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது
- 23 பெப்பிரவரி 2017: பூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு
- 15 பெப்பிரவரி 2017: இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது
- 14 சனவரி 2017: இசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது
- 15 திசம்பர் 2016: கலிலியோ செயற்கைகோள் செயல்பாட்டுக்கு வந்தது
ஞாயிறு, திசம்பர் 26, 2010
தொலைத்தொடர்புச் செயற்கைக் கோள் ஒன்றைக் காவிச் சென்ற இந்தியாவின் ஜி. எஸ். எல். வி ஏவி ஊர்தி ஒன்று ஏவப்பட்ட சிறிது நேரத்தில் வானில் வெடித்துச் சிதறியது. சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டது.
இந்த விபத்துக்கான காரணங்களைத் தாம் ஆராய்ந்து வருவதாக இந்திய விண்வெளிக் கழகம் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நேற்று சனிக்கிழமை அன்று மாலை 4மணி 1 நிமிடம் அளவில் இந்தியாவின் புவியிசைவுத் துணைக்கோள் ஏவி (GSLV) ஜிசாட்-5பி என்ற தொலைத்தொடர்பு செயற்கைக் கோளைக் காவிச் சென்ற போது தனது முதலாவது கட்டத்திலேயே திசைமாறிச் செல்ல ஆரம்பித்தது. இதன் பின்னர் பூமியுடனான தொடர்புகள் அறுந்த நிலையில் அது வெடித்துச் சிதறியுள்ளது. இதன் சிதறிய பாகங்கள் பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்தன.
"முதல் 50 செக்கன்களுக்கு அது திட்டமிட்ட பாதையிலேயே சென்றது. அதன் பின்னர் அது திசை மாறிச் செல்ல ஆரம்பித்து பின்னர் வெடித்தது," என இஸ்ரோவின் தலைவர் கே. இராதாகிருட்டிணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த வாரம் டிசம்பர் 20 ஆம் நாள் இந்த ஏவூர்தி விண்ணில் செலுத்தப்படுவதாக இருந்தது, திடீர் தொழில் நுட்ப கோளாறினால் அதன் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
எஸ்.எல்.வி- 3, ஏ.எஸ்.எல்.வி, பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி, என நான்கு வகையான ஏவூர்திகள் மூலம் இந்திய மற்றும் பிற நாட்டு தயாரிப்பு செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது. செயற்கைகோள் ஜிசாட்-5பி தகவல் தொடர்பு சேவைக்கு பயன்படும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டிருந்தால் தொலைதொடர்பு, தொலை மருத்துவம், உள்ளிட்ட துறைகளில் பெரும் பங்காற்றியிருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த ராக்கெட் புவி வட்டப் பாதையை சென்றடையத் தேவையான சக்தியை அளிக்கும் கிரையோஜெனிக் என்ஜின்களை தயாரிக்க இந்தியா எடுத்து வரும் முயற்சிகள் இதுவரை பயனைத் தரவில்லை. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட ஜி எஸ் எல் வி-டி 3 (GSLV-D3) ராக்கெட்டை ஏவும் முதல்முயற்சி கடந்த ஏப்ரல் மாதம் தோல்வியடைந்தது. தற்போது ஏவப்பட்ட ஜி எஸ் எல் வி ராக்கெட்டில் ரஷ்யாவில் இருந்து வரவழைக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டிருந்தது.
தொடர்புள்ள செய்திகள்
[தொகு]- கடுங்குளிர் நுட்பத்தில் உருவான இந்தியாவின் ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவும் முயற்சி தோல்வி, வியாழன், ஏப்ரல் 15, 2010
மூலம்
[தொகு]- India satellite rocket explodes after take-off, பிபிசி, டிசம்பர் 25, 2010
- GSLV mission fails: GSAT-5P explodes in mid-air, எக்கனொமிக் டைம்சு, டிசம்பர் 25, 2010