உள்ளடக்கத்துக்குச் செல்

புளூட்டோவின் ஐந்தாவது புதிய துணைக்கோள் கண்டுபிடிப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சூலை 13, 2012

புளூட்டோவின் புதிய துணைக்கோள் ஒன்றைத் தமது ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி கண்டுபிடித்திருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா அறிவித்துள்ளது.


புளூட்டோவும் அதன் துணைக்கோள்களும்

இந்தத் துணைக்கோளுக்கு பி5 (P5) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது கண்டறியப்பட்டுள்ளதாக கடந்த புதன்கிழமை அறிவிக்கப்பட்டது. இது புளூட்டோவின் 5வது துணைக்கோள் (நிலா) ஆகும். நான்காவது துணைக்கோள் எசு/2011 பி1 கண்டறியப்பட்டு ஓராண்டின் பின்னர் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


புளூட்டோ தொகுதி எவ்வாறு தோன்றியது, மற்றும் அதன் வளர்ச்சி பற்றி அறிய இக்கண்டுபிடிப்பு உதவும் என அறிவியலாளர்கள் கருதுகின்றனர். ஒரு சிறிய உலகம் இத்தனை அதிகமான துணைக்கோள்களைக் கொண்டிருப்பது அறிவியலாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்னர் புளூட்டோவிற்கும் வேறொரு பெரிய விண்பொருள் ஒன்றிற்கும் இடையே ஏற்பட்ட மோதலால் இவ்வாறான துணைக்கோள்கள் உருவாகியிருக்கலாம் என சில அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.


புளூட்டோவின் மிகப்பெரிய துணைக்கோள் சாரோன் 1978 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டில் நிக்சு, ஐதரா என இரு சிறிய துணைக்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 2011 இல் பி4 கண்டுபிடிக்கப்பட்டது.


எசு2012 (134340) 1, அல்லது பி5 என அழைக்கப்படும் இந்த ஐந்தாவது துணைக்கோள் சூன் 26 முதல் சூலை 9 வரையான காலப்பகுதியில் ஹபிள் தொலைநோக்கியில் பொருத்தப்பட்டிருந்த அகலப்புலப் படம்பிடிகருவி எடுத்த 9 தொகுதிப் படிமங்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


நாசாவின் நியூ ஹரைசன்சு என்ற ஆளில்லா விண்கலம் தற்போது புளூட்டோவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது 2015 ஆம் ஆண்டில் புளூட்டோவை அணுகும். இவ்விண்கலம் புளூட்டோவின் மிக அருகான படங்களை அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.


1930 ஆம் ஆண்டில் அமெரிக்காவைச் சேர்ந்த கிளட் டோம்பா என்பவர் புளூட்டோவைக் கண்டுபிடித்தார். இது நமது சூரியக் குடும்பத்தின் ஒன்பதாவது கோள் எனக் கருதப்பட்டது. ஆனால் 2006 ஆம் ஆண்டில் கோள் என்ற வரையறைக்குள் அது அடங்கவில்லை என்றும், அது ஒரு குறுங்கோள் எனவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட்டது. நெப்டியூனுக்கு சற்று அப்பாலுள்ள கைப்பர் பட்டை எனப்படும் பனிக்கட்டிப் பிரதேசத்தில் அமைந்திருப்பதாலேயே இது கோள் என்று வகைப்படுத்தப்படவில்லை.


மூலம்

[தொகு]