உள்ளடக்கத்துக்குச் செல்

நெப்போலியன் புனித எலனாவில் இருந்து ஆங்கிலத்தில் எழுதிய கடிதம் ஏலத்தில் விற்பனை

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சூன் 11, 2012

பிரெஞ்சுப் பேரரசன் நெப்போலியன் பொனபார்ட் மிக அரிதாக ஆங்கிலத்தில் எழுதிய கடிதம் ஒன்று 325,000 யூரோக்களுக்கு பிரான்சில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இக்கடிதத்தை பாரிசில் உள்ள கடிதங்களுக்கும் சுவடிகளுக்குமான பிரெஞ்சு அருங்காட்சியகம் விலைக்கு வாங்கியுள்ளது.


நெப்போலியன் பொனபார்ட்
புனித எலனா தீவில் நெப்போலியன்

தெற்கு அத்திலாந்திக்கில் புனித எலனா தீவில் 1816 ஆம் ஆண்டில் நெப்போலியன் நாடுகடத்தப்பட்ட நிலையில் இருந்த போது ஆங்கிலம் கற்க ஆரம்பித்ததாகவும், அப்போது இக்கடிதத்தை எழுதியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 1816 மார்ச் 9 எனத் தேதியிடப்பட்ட இந்த ஒரு-பக்கக் கடிதம் அதே தீவில் நெப்போலியனுடன் வாழ்ந்து வந்தவரும் நெப்போலியனுக்கு ஆங்கிலம் பயிற்றுவித்தவருமான கொம்டி டி லாசு கேசசு என்பவருக்கு எழுதப்பட்டது.


ஐரோப்பாவில் இருந்து புதிய செய்திகளுடன் ஒரு வாரத்தில் கப்பல் ஒன்று புனித எலனா தீவுக்கு வரவிருப்பதாக அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. ஆனாலும், இக்கடிதம் நிறைய ஆங்கிலத் தவறுகளுடன் எழுதப்பட்டிருந்தது. அதிகாலை 4 மணிக்கு இது எழுதப்பட்டதாக நெப்போலியன் குறிப்பிட்டிருந்ததில் இருந்து அவன் தூக்கமின்மை நோயால் அவதிப்பட்டான் என நம்பப்படுகிறது. ஆங்கிலத்தில் நெப்போலியன் தன் வாழ்நாளில் மூன்று கடிதங்களே எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது.


தன்னைக் கைப்பற்றிய பிரித்தானியர்களின் மொழியை கற்க நெப்போலியன் எவ்வளவு ஆர்வம் கொண்டிருந்தான் என்பதை கொம்டே டி லாசு கேசசு தான் எழுதிய நூல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.


1815 ஆம் ஆண்டில் வாட்டர்லூ போரில் நெப்போலியன் தோல்வியைத் தழுவியதை அடுத்து கைது செய்யப்பட்டு புனித எலனா தீவுக்கு நாடு கடத்தப்பட்டான். தனது 51வது அகவையில் 1821 ஆம் ஆண்டில் புனித எலனா தீவில் நெப்போலியன் இறந்தான்.


மூலம்

[தொகு]