நிலவின் நீர் வால்வெள்ளிகளில் இருந்து வந்திருக்கலாம், ஆய்வுகள் தெரிவிப்பு
- 8 பெப்பிரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது
- 23 பெப்பிரவரி 2017: பூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு
- 15 பெப்பிரவரி 2017: இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது
- 14 சனவரி 2017: இசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது
- 15 திசம்பர் 2016: கலிலியோ செயற்கைகோள் செயல்பாட்டுக்கு வந்தது
புதன், சனவரி 12, 2011
நிலவியல் வரலாற்றின் ஆரம்பத்தில் நிலவுடன் மோதிய வால்வெள்ளியில் இருந்து அங்கு நீர் உருவாகியிருக்கக்கூடும் என நாசாவின் அப்பல்லோ திட்டத்தில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளின் அண்மைய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய அமெரிக்காவின் கனெடிகட் மாநிலத்தில் உவெசுலியன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் கிரீன்வுட் என்பவரின் தலைமையில் அப்பலோத் திட்டத்தின் மூலம் நிலவில் 1969 முதல் 1972 வரை தரையிறங்கிய அப்பல்லோ 11, 12, 14 மற்றும் 17 ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகள் ஆராயப்பட்டன. இவ்வாய்வின் படி, நிலவின் தண்ணீரின் வேதியியல் பண்புகள் பூமியில் உள்ள நீரின் பொதுவான பண்புகளை ஒத்திருக்கவில்லை எனக் காணப்பட்டுள்ளது.
"அப்பல்லோ பாறை மாதிரிகளின் டியூட்டேரியம்/ஐதரசன் (D/H) விகிதம் புவியின் தண்ணீரின் விகிதத்தை விட வேறுபட்டவையாகக் காணப்படுகின்றது," என கிரீன்வுட் தெரிவித்தார்.
புதிதாக அறியப்பட்ட தரவுகள் ஹேல்-பொப், ஹேலி, மற்றும் ஹயக்குட்டாக்கி வால்வெள்ளிகளில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளின் வேதியியல் இயல்புகளை ஒத்துள்ளது. இதனால் சந்திரனில் உள்ள நீர் இந்த வால்வெள்ளிகளின் மூலமோ அல்லது வேறு வால்வெள்ளிகளின் மூலமோ வந்திருக்கலாம் எனக் கருதுவதற்கு இடமுண்டு.
இவ்வாய்வுகளின் முடிவுகள் புவியில் நீர் எவ்வாறு வந்தது என்பதற்கும் விடை கிடைக்கலாம் என கிரீன்வுட் தெரிவித்தார். இவ்வாய்வுகள் குறித்த முடிவுகள் சனவரி 9 ஆம் நாளைய நேச்சர் ஜியோசயன்ஸ் என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ளது.
மூலம்
- Denise Chow "Moon Water Most Likely Originated From Comets". ஸ்பேஸ்.கொம், சனவரி 10, 2011
- "Lunar water may have come from comets". 9எம்எஸ்என், சனவரி 9, 2011