உள்ளடக்கத்துக்குச் செல்

அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட தமிழ் அகதிகளுக்கு சார்பாக ஆத்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், நவம்பர் 11, 2010


கிறிஸ்துமஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டு அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்ட இரண்டு இலங்கைத் தமிழ் அகதிகளின் அகதி விண்ணப்பங்கள் "நியாயமான வகையில்" அணுகப்படவில்லை என ஆத்திரேலிய உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.


இத்தீர்ப்பை அடுத்து கடல் வழியாகப் படகுகளில் ஆஸ்திரேலியாவுக்குள் நுழையும் அகதிகளுக்கான தனது கொள்கைகளில் இடனடியாக மாற்றங்களைக் கொண்டுவர ஆத்திரேலிய அரசுக்கு நிர்ப்பண்டம் ஏற்பட்டுள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.


தற்போதைய அரசும் அதற்கு முன்னர் ஜோன் ஹவார்ட் அரசும் கடல் வழியே நாட்டுக்குள் வரும் அகதிகளை கிறிஸ்துமசு தீவிலும், முன்னர் நவூரிலும் தடுத்து வைத்து விசாரித்து வருகிறது. அத்துடன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் பட்சத்தில் அவர்கள் மேன் முறையீடு செய்யவும் தடை இருந்து வந்தது.


இவர்களின் அகதி விண்ணப்பங்களை ஆத்திரேலிய அகதிகள் சட்டத்துக்குப் புறம்பாகவே குடிவரவுத் திணக்க்கள அதிகாரிகள் விசாரித்து வந்ததாக அகதிகளுக்காக வாதாடிய வழக்கறிஞர்கள் கூறினர்.


வான் வழியே உள்நுழைபவர்களின் விண்ணப்பங்கள் ஆத்திரேலியாவுக்குள்ளேயே பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. மேலும் அவர்களுக்கு மேன்முறையீடு செய்யவும் முடியும்.


ஏழு நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வில் அனைத்து நீதிபதிகளும் அகதிகளுக்குச் சார்பாகவே தீர்ப்பளித்துள்ளனர்.


அகதிகளுக்கான சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. இத்தீர்ப்பினால் அகதிகளின் வருகை அதிகரிக்கும் எனவும் மேன்முறையீடுகள் அடுத்த பல ஆண்டுகளுக்கு அதிகரிக்கும் எனவும் அது எச்சரித்துள்ளது.


மூலம்

[தொகு]