உள்ளடக்கத்துக்குச் செல்

அங்கோலாவில் டோகோ கால்பந்தாட்டக் குழு மீது துப்பாக்கிச் சூடு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சனவரி 9, 2010


அங்கோலாவில் ஆரம்பமாகவிருக்கும் ஆப்பிரிக்கக் கிண்ணப் போட்டியில் கலந்து கொள்ளவென பேருந்து ஒன்றில் சென்றுகொண்டிருந்த டோகோ கால்பந்தாட்டக்குழுவினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் பலர் வீரர்கள் காயமடைந்தனர். ஓட்டுனர் உயிரிழந்தார்.


பேருந்து கொங்கோ குடியரசின் எல்லையைத் தாண்டி அங்கோலாவின் எண்ணெய் அதிகமாக விளையும் கபிண்டா பிரதேசத்திற்குள் சென்ற போதே இத்தாக்குதல் இடம்பெற்றது.


கபிண்டா பிரதேசாத்திற்கு சுயாட்சி கோரி 1963 ஆம் ஆண்டில் இருந்து போராடி வரும் பிளெக் என்ற கபிண்டா விடுதலை முன்னணி என்ற போராளிகள் குழு இத்தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளது.


ஞாயிறன்று ஆரம்பமாகவிருக்கும் ஆப்பிரிக்கக் கிண்ணப் போட்டி திட்டமிட்டவாறு இடம்பெறும் என அதன் ஒழுங்கமைப்பாளர்கள் தெரிவித்தனர்.


"இது ஒரு பயங்கரவாதச் செயல்" என இத்தாக்குதலை அங்கோலா அரசு வர்ணித்திருக்கிறது.


பல தசாப்தங்களாக தனிநாடு கோரிப் போராடி வரும் பிளெக் அமைப்பு 2006 ஆம் ஆண்டில் போர்நிறுத்த உடன்பாட்டிற்கு வந்திருந்தது.


"இது ஒரு ஆரம்பத்தாக்குதலே. இது போன்ற தாக்குதல்கள் கபிண்ட்டாவின் அனைத்துப் பகுதிகளிலும் தொடரும்" என பிளெக் அமைப்பினர் போர்த்துக்கலின் லூசா செய்திச் சேவைக்குத் தெரிவித்தனர்.


டோகோ தனது முதலாவது போட்டியை திங்கட்கிழமை அன்று ஆடவிருக்கிறது. இத்தாக்குதலை அடுத்து அங்கோலாவில் பாதுகாப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கோலாவின் விளையாட்டுத்துறை அமைச்சர் முவாண்டும்பா தெரிவித்தார்.

மூலம்