உள்ளடக்கத்துக்குச் செல்

அந்தமான் தீவுகளின் முதல் மொழி அகராதி தொகுக்கப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, நவம்பர் 18, 2011

இந்தியாவின் அந்தமான் தீவுகளில் அழிந்து வரும் நிலையில் உள்ள நான்கு மொழிகள் குறித்த முதல் அகராதியை பிரித்தானியப் பேராசிரியை அன்வித்தா அபி தொகுத்துள்ளார். அந்தமானில் பேசப்படும் போ என்ற மொழி பேசும் கடைசி நபர் கடந்த ஆண்டு இறந்துபோனதை அடுத்து அந்த மொழி அழிந்துவிட்டதாக கருதப்படுகிறது.


அந்தமானின் பூர்வ குடியினர் உலகின் மிகத் தொன்மையான நாகரிகங்களில் ஒன்றைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த அகராதியைத் தொகுக்கும் உத்வேகம் தமக்கு ஏற்பட்டதாக லண்டனில் உள்ள கீழைத்தேய மற்றும் ஆப்பிரிக்கக் கல்வி நிலையத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் பேராசிரியர் அன்வித்தா அபி பிபிசியிடம் தெரிவித்தார். இந்த நான்கு மொழிகளில் போ மற்றும் கோரா ஆகிய இரண்டு மொழிகள் ஏற்கனவே அழிந்துவிட்டன. ஏனைய இரண்டு மொழிகள் ஜேரு மற்றும் சாரே ஆகியவை மிகச் சிலரால் பேசப்பட்டு வருகிறது.


அகராதியில் இணைக்கப்பட்டுள்ள சொற்கள் அனைத்தும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மிக விரிவாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இதில் உள்ள தகவல்கள் அறிவியலாளர்களுக்குப் பெரிதும் பயனளிக்கும் என மொழியியலாளர்கள் கருதுகின்றனர்.


அந்தமானில் வாழும் பூர்வகுடியினர் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள் என்று கருதப்படுகிறது. இவர்களின் மொழிகளில் சில 70,000 ஆண்டுகள் பழமையானவை எனக் கூறப்படுகிறது.


பழங்குடியின மக்கள் வாழும் காட்டுப் பகுதிகள் வழியாக செல்லப் பல கட்டுப்பாடுகள் உள்ளன. தற்போது அதிகரித்துவரும் சுற்றுலாத் தொழில் காரணமாக பழங்குடியினருக்கும் வெளியுலகுக்கும் இடையேயான தொடர்புகள் அதிகரித்துவருகின்றன. ஆனால் இத்தொடர்புகள் காரணமாக வெளி உலக பழக்க வழக்கங்களுக்கு அடிமைப்படத் தொடங்கியுள்ளதாகவும் மதுப் பழக்கம் போன்ற தீய பழக்கங்களும் அவர்களிடம் ஏற்பட்டுள்ளதாகவும் சில ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]