அமெரிக்காவில் வழக்கை சந்திக்க சிங்கப்பூர் நபருக்கு உத்தரவு

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

புதன், நவம்பர் 4, 2009


சிங்கப்பூரில் மாவட்ட நீதிமன்றம் ஒன்று, அமெரிக்காவில் சரண் அடைவதற்கு ஏதுவாக சிங்கப்பூரர் ஒருவரை விசாரணைக் காவலில் வைக்கும்படி உத்தர விட்டுள்ளது. அவர் சரண் அடைவதற்கு அமைச்சரின் உத்தரவு ஒன்று நிலுவையில் இருக்கிறது.


பல்தேவ் நாயுடு ராகவன் அல்லது பல்ராஜ் நாயுடு ராகவன் (47) என்று அழைக்கப்படும் சிங்கப்பூரர் அமெரிக்காவில் தீவிரவாதம் தொடர்பான வழக்கை எதிர் நோக்குவதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதை மாவட்ட நீதிபதி சுட்டிக் காட்டினார்.


கடந்த செப்டம்பர் 22ம் தேதி சிங்கப்பூரில் உள்ள வீட்டில் அவர் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவில் சரண் அடைவது பற்றிய வழக்கில் அவர் நேற்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். தாம் தவறு ஏதும் செய்யவில்லை என்று கூறிய திரு நாயுடு, அமெரிக்காவில் முழு விசாரணைக்குக் கோரிக்கை விடுக்கப் போவதாகத் தெரிவித்தார். சிங்கப்பூரில் தொடங்கப்பட்ட சீர்திருத்தக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர் திரு நாயுடு.


அமெரிக்காவில் ஆறு குற்றச் சாட்டுகளை அவர் எதிர் நோக்குகிறார். சதித் திட்டம் தீட்டியது, வெளி நாட்டு தீவிரவாத அமைப்புக்கு பொருட்களை வழங்கியது, பயங்கர ஆயுதத்தை கைவசம் வைத்திருந்தது ஆகியன அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் சில. கடந்த 2006ம் ஆண்டில் பெப்ரவரி மாதத்துக்கும் செப்டம்பர் மாதத்துக்கும் இடையில் இந்தக் குற்றச்செயல்கள் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.


நாயுடுவுடன் சேர்ந்து சதி செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மற்றொரு நபர் ஹனிஃபா ஒஸ்மானுக்கு அமெரிக்காவின் பால்டிமோர் நீதிமன்றம் ஓராண்டுக்கு முன்பு 37 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. முகவர் ஒருவர் மூலம் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதக் கொள்முதல் செய்வதற்கு உதவ, இதர இரண்டு பேருடன் சேர்ந்து ஹனிஃபா ஒஸ்மான் சதித் திட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.

மூலம்