உள்ளடக்கத்துக்குச் செல்

அமெரிக்க மருத்துவர் பட்டேல் மீது ஆத்திரேலியாவில் கொலைக் குற்றச்சாட்டு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், மார்ச்சு 22, 2010

இந்தியாவில் பிறந்த அமெரிக்க மருத்துவர் ஒருவர் கொலை அல்லது கொலை முயற்சி போன்ற மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு ஆஸ்திரேலியாவின் பிறிஸ்பேன் நகரில் இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.


ஜெயந்த் பட்டேல் என்ற 59 அகவையுடைய அந்த மருத்துவர் ஒவ்வொரு குற்றத்தையும் நீதிபதி படித்த போது “தான் குற்றவாளியல்ல” எனக் கூறினார்.


2003 - 2005 காலப்பகுதியில் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பண்டபேர்க் மருத்துவமனையில் இவர் பணியாற்றிய போது இக்குற்றங்களை இழைத்திருந்தார் எனக் கூறப்படுகிறது. இவர் இக்குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாகக் காணப்படும் இடத்து இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படலாம்.


2008 ஆம் ஆண்டில் இவர் ஆஸ்திரேலியாவில் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்க அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டார். நீதிமன்ற விசாரணைகள் 4 முதல் 6 வாரங்கள் இடம்பெறும் எனவும், 90 பேர் வரையில் விசாரிக்கப்பட இருக்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது.

டாக்டர் பட்டேல் சத்திர சிகிச்சைகளை மேற்கொண்ட போது திறமையின்மை, மற்றும் ஐக்கிய அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட மருத்துவ முறைகளை ஆஸ்திரேலியாவில் மேற்கொண்டமை போன்ற பல குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.


நோயாளி ஒருவரின் குடலை எவ்விதக் காரணமும் இன்றி அகற்றியிருந்தார். வேறொரு நோயாளி உள் இரத்த வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தத் தவறியாஇயால் அந்த நோயாளி இறந்துள்ளார்.


வேறொரு நோயாளிக்கு பட்டேல் தொண்டையில் சத்திரசிகிச்சை மேற்கொண்டார். இம்மாதிரியான சிகிச்சை பொதுவாக பண்டபேர்க் மருத்துவமனையில் மேற்கொள்ளப்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. அந்நோயாளி இரண்டு நாட்களில் உயிரிழந்தார்.


1980களில் பட்டேல் அமெரிக்காவில் பணியாற்றும் போது அவரது திறமையின்மை குறித்து குற்றச்சாட்டுக்கள் கிளம்பின. 1984 ஆம் ஆண்டில் நியூயோர்க்கில் அவருக்குத் தண்டம் அறவிடப்பட்டு மூன்றாண்டுகள் சத்திரசிகிச்சைகள் மேற்கொள்வது தடை செய்யப்பட்டது.

மூலம்[தொகு]